‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தற்கொலை: தர்மபுரி மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட தர்மபுரி மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி இலக்கியம்பட்டி செந்தில்நகர் செவத்தா கவுண்டர் தெருவை சேர்ந்த மணிவண்ணன்-ஜெயசித்ரா தம்பதியின் ஒரே மகன் ஆதித்யா (வயது20). கடந்த 2018-ம் ஆண்டு பிளஸ்-2 படிப்பை முடித்த இவர் கடந்த 2 ஆண்டுகளாக நீட்தேர்வை எழுதினார். இந்த நிலையில் 3-வது முறையாக நீட்தேர்வு எழுத தயாரான அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட்தேர்வு அச்சத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நேற்று காலை மாணவரின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். கலெக்டர் மலர்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு வந்து மாணவரின் பெற்றோரிடம் பிரேத பரிசோதனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து மாணவரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதனிடையே மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனை கூடம் முன்பு உடலை வாங்க மறுத்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோரின் கையெழுத்தை பெறாமல் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்று விட்டதாக கூறிய அவர்கள், நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதுவரை மாணவரின் உடலை வாங்க மாட்டோம் என்று கதறி அழுதபடி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்தின் போது மாணவரின் தாயாருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உடலை வாங்க மறுத்த உறவினர்களின் போராட்டம் 5 மணி நேரம் தொடர்ந்தது. இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், மாணவரின் உறவினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். இந்த கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டனர்.
இதைத்தொடர்ந்து மாணவரின் உடல் அமரர் ஊர்தி மூலம் அவருடைய சொந்த ஊரான சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டிக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story