திருக்கோவிலூர் அருகே, திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் இளம்பெண் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது


திருக்கோவிலூர் அருகே, திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் இளம்பெண் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 14 Sept 2020 11:15 AM IST (Updated: 14 Sept 2020 10:40 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஞானம்பெற்றான்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் சிவலட்சுமி(வயது 18). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை மகன் சோமசுந்தரம் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும் சிவலட்சுமியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிவலட்சுமி தனது காதலன் சோமசுந்தரம் வீட்டிற்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் சோமசுந்தரமோ, திருமணம் செய்ய மறுத்து விட்டார். மேலும் சோமசுந்தரத்தின் தாய் மலர்(42), சிவலட்சுமியை ஆபாசமாக திட்டியதோடு, எனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துவைப்பேனே தவிர, உன்னை திருமணம் செய்து வைக்கமாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டிற்கு சென்று துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, சிவலட்சுமி தற்கொலைக்கு காரணமான சோமசுந்தரம், அவரது தாய் மலர் ஆகிய 2 பேரையும் கைது செய்யக்கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதை அவரது உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து சிவலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் சிவலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மலரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சோமசுந்தரத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சிவலட்சுமி தனது காதலனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. அதில், சோமு உன்னை மனமார காதலிக்கிறேன். சத்தியமா உன்னை மறக்கமுடியல, என்னை திருமணம் செய்ய மறுக்கிறாய், என்னை புரிஞ்சிக்க மாட்டியா, என்னை வேண்டாம் என்று சொல்லாதடா, என்னை செத்துபோகச்சொல் செய்கிறேன். ஆனால் நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று எழுதியுள்ளார்.

திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story