திண்டிவனம் அருகே, சினிமா பட பாணியில் பரபரப்பு சம்பவம்: கத்திமுனையில் தொழில் அதிபரிடம் ரூ.4 கோடி வைர நகைகள் கொள்ளை - 15 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


திண்டிவனம் அருகே, சினிமா பட பாணியில் பரபரப்பு சம்பவம்: கத்திமுனையில் தொழில் அதிபரிடம் ரூ.4 கோடி வைர நகைகள் கொள்ளை - 15 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Sept 2020 10:54 AM IST (Updated: 14 Sept 2020 10:54 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் கத்திமுனையில் தொழில் அதிபரிடம் ரூ.4 கோடி வைர நகைகளை 15 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சினிமா பட பாணியில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மயிலம், 

விழுப்புரம் ஆசாரங்குப்பத்தை சேர்ந்தவர் கருணாநிதி(வயது 50). இவர் சென்னையில் டெலிகாம் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். தொழிலதிபரான இவருக்கு சொந்தமாக 56.2 கிராம் எடையுள்ள 4 வைர மோதிரங்கள் இருந்தது. இதை அவர், விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த அருள்முருகன் (55) என்பவரை அணுகி உள்ளார்.

இந்த நிலையில், நேற்று மதியம் 1 மணிக்கு மயிலம் கூட்டேரிப்பட்டுக்கு அருள்முருகன், வடபழனி குமரன் காலனியை சேர்ந்த செந்தில்(44) என்பவருடன் காரில் வந்தார். அப்போது கருணாநிதிக்கு போன் செய்த அவர்கள், உங்களிடம் உள்ள வைர மோதிரங்களை வாங்குவதற்கு சென்னையில் இருந்து ஒருவர் காரில் வருகிறார். எனவே கூட்டேரிப்பட்டுக்கு வந்துவிடுங்கள். அங்கு வைத்து பேசி முடிவு செய்து விற்பனை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கருணாநிதி தன்னிடம் இருந்த 4 வைர மோதிரங்களை எடுத்து கொண்டு, வக்கீல் பிரகலாதன்(28), நண்பர் ராவணன் ஆகியோருடன் ஒரு காரில் கூட்டேரிப்பட்டுக்கு வந்தனர். அப்போது, சென்னையில் இருந்து ஒரு கார் அங்கு வந்தது. அதில், 5 பேர் வந்து இறங்கினார்கள். இவர்களில் 2 பேர், கருணாநிதி அமர்ந்திருந்த காருக்கு வந்தனர்.

கருணாநிதியுடன் வந்த ராவணன் மற்றும் ஏற்கனவே அங்கு காரில் வந்து நின்று கொண்டிருந்த அருள்முருகன் ஆகியோர் சென்னையில் இருந்து வந்த காரில் ஏறி கொண்டனர். பின்னர் அங்கிருந்து சற்று தூரத்தில் சென்று பேரம் பேசி, நகையை விற்பனை செய்து கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து திண்டிவனம் அருகே தீவனூர் ரோட்டில் 2 கார்களில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கோபாலபுரம் அருகே சென்றபோது, கருணாநிதி சென்ற கார் மீது மோதுவது போன்று மற்றொரு கார் வேகமாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரகலாதன் காரை உடனடியாக நிறுத்தினார். இந்த நிலையில் காருக்குள் இருந்த 2 பேர் பிரகலாதன் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, கண் இமைக்கும் நேரத்தில் கருணாநிதியின் கழுத்தில் கத்தியை வைத்தார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனார்கள். தொடர்ந்து கருணாநிதி அணிந்திருந்த 5 பவுன் செயின், 2 பவுன் மோதிரம் மற்றும் விற்பனைக்காக எடுத்து வந்த 56.2 கிராம் எடையுள்ள 4 வைர மோதிரத்தையும் அவர்கள் பறித்து, விட்டு அங்கிருந்து ஒரு காரில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்கள்.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து வந்த காரில் பயணம் செய்த ராவணனை அவர்கள் அங்கேயே இறக்கி விட்டனர். அப்போது நடந்த தகராறில் அருள்முருகனை கருணாநிதி தரப்பினர் மடக்கி பிடித்தனர். இதனால் கொள்ளை கும்பல், தாமும் சிக்கிக்கொள்வோம் என்கிற அச்சத்தில், அவரை அங்கேயே விட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். மேலும் 2 கார்களையும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த செந்தில் என்பவரையும் அவர்கள் மடக்கி பிடித்தனர்.

இது குறித்து உடனடியாக மயிலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் வந்து அருள்முருகன், செந்தில் ஆகியோரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே கொள்ளை சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

சினிமா படங்களில் கடத்தல் கும்பல் வைரத்தை கொள்ளையடிப்பது போன்று அடுத்தடுத்து கார்களில் வந்து சதிதிட்டத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். கொள்ளை சம்பவத்தில் 15 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. அனைத்து திட்டங்களையும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று முன்கூட்டியே ஒத்திகை பார்த்து இந்த துணிகர கொள்ளையை அவர்கள் அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story