பெண்ணாடம் அருகே, வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் - மின்வெட்டை கண்டித்து நடத்தினர்


பெண்ணாடம் அருகே, வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் - மின்வெட்டை கண்டித்து நடத்தினர்
x
தினத்தந்தி 14 Sept 2020 10:59 AM IST (Updated: 14 Sept 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே கொள்ளத்தங்குறிச்சி, திருமலைஅகரம், மேலூர், மருதாத்தூர், ஏரப்பாவூர், அருகேரி, கொத்தட்டை, வடகரை, நந்தி மங்கலம், கோனூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் மின் மோட்டார்களை இயக்கி வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கொள்ளத்தங்குறிச்சியில் உள்ள ஒரு வயலில் இறங்கி அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்தும், ஏற்கனவே வழங்கியது போல் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.

அப்போது, தொடர் மின்வெட்டால் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த ஒரு வாரமாக எந்த ஒரு விவசாய பணியும் செய்ய முடியவில்லை என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கலைந்து சென்றனர். இருப்பினும் விவசாயிகளின் இந்த போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story