கோவையில் பலத்த சோதனை: 9,206 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள் - 2,502 பேர் வரவில்லை
கோவையில் நடந்த நீட் தேர்வுக்கு பலத்த சோதனைக்கு பிறகு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வை 9 ஆயிரத்து 206 பேர் எழுதினார்கள்.
கோவை,
மருத்துவ படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்ற தேசிய அளவிலான தகுதித்தேர்வு கோவை மாவட்டத்தில் 16 மையங்களில் நேற்று நடந்தது. இந்த தேர்வு எழுதுவதற்கு 11 ஆயிரத்து 708 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 206 மாணவ-மாணவிகள் நேற்று தேர்வ எழுதினார்கள். 2 ஆயிரத்து 502 பேர் தேர்வு எழுத வரவில்லை.
கோவை மாவட்டத்தில் உள்ள மையங்களில் தேர்வு எழுதுவதற்காக காலை 11 மணி முதலே மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கும் பணி தொடங்கியது. தனியார் பள்ளிக்கு செல்லும் சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து தேர்வு எழுதும் மாணவர்களை மட்டுமே பள்ளிக்குள் செல்ல அனுமதித்தனர்.
தேர்வு எழுத வந்த மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தனர். ஹால் டிக்கெட், ஆதார் போன்ற அடையாள அட்டை, ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ, போஸ்ட் கார்டு அளவு போட்டோ ஆகியவற்றை மட்டும் தேசிய தேர்வு முகமை ஊழியர்கள் சரிபாரித்து உள்ளே அனுப்பினார்கள்.
தேர்வு மையத்துக்குள் ஆபரணங்கள் அணிந்து செல்ல அனுமதி இல்லை என்பதால், கம்மல், ஜிமிக்கி, தங்க சங்கிலி அணிந்து வந்த மாணவிகள் அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றனர். தலையில் கிளிப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை.
இதனால் அந்த மாணவிகளின் தாயார் ரப்பர் பேண்ட் போட்டு தலைமுடியை பின்னி அனுப்பினார்கள். ரப்பர் பேண்ட் இல்லாமல் வந்த மாணவிகள் தலைமுடியை பின்ன முடியாமல் தேர்வு எழுத சென்றனர். துப்பட்டா அணிந்து வந்த மாணவிகள், அவற்றை வெளியே வைத்திருந்த பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர். பேனா, கைக்குட்டைககளும் வெளியே வைத்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டனர். பெல்ட் அணிந்து வந்த மாணவர்கள் அதை கழற்றி விடுமாறு கூறப்பட்டது.
தேர்வு கூடத்திற்கு பார்க்க முடியும் வகையில் இருக்கும் வெள்ளை நிற பாட்டில்களை தண்ணீர் பாட்டில்களை மட்டும் அனுமதித்தனர். பல வண்ணங்களில் உள்ள தண்ணீர் பாட்டில்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாணவரும் சிறிய பாட்டில் கிருமிநாசினி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் உள்ளே செல்லும் மாணவர்கள் கண்டிப்பாக கையுறை அணிய வேண்டும் என்றும், பல வண்ணங்களில் உள்ள கையுறைகளுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பின்னர் தேர்வு நடத்தும் அதிகாரிகள் வந்து எந்த நிற கையுறை என்றாலும் அணிந்து வரலாம் என்று கூறப்பட்டதால் மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.
தேர்வு கூடத்துக்கு செல்வதற்கு முன்பு பள்ளிக்கூட வாசலில் மாணவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்களை கோவை மாநகர போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் தொடாமல் சோதனை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கிருமி நாசினி கைகளில் தெளித்து சுத்தப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். தேர்வு கூடத்துக்குள் சென்றதும் அனைத்து மாணவ-மாணவிகளும் அவர்கள் அணிந்து வந்திருந்த முகக்கவசத்தை கழற்றி விட்டு தேசிய தேர்வு முகமை அளித்த முகக்கவசத்தை அணிந்து கொண்டனர். அங்கு ஒவ்வொரு அறையிலும் 12 மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து தேர்வு எழுதினார்கள். ஒவ்வொரு அறைக்கும் 2 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கோவை மாவட்டத்தில் தேர்வு நடந்த 16 மையங்களிலும் சுமார் ஆயிரத்து 500 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையத்தில் அருகே உள்ள 2 பள்ளிகள் நீட் தேர்வு நடந்தது. இதில், ஒரு பள்ளியில் 780 மாணவ-மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது ஆனால் 608 பேர்தான் தேர்வு எழுதினார்கள். 272 பேர் தேர்வு எழுத வரவில்லை. மற்றொரு பள்ளியில் 720 பேர் நீட் தேர்வு எழுத இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் 570 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 150 பேர் தேர்வு எழுத வரவில்லை. நீட் தேர்வையொட்டி 2 மையங்களிலும் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story