மாவட்ட செய்திகள்

வத்தலக்குண்டு அருகே, கள்ளக்காதலி வீட்டில் விவசாயி மர்ம சாவு - 3 இடங்களில் மறியல்; ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு + "||" + Near Vattalakundu, Mysterious death of farmer at fake girlfriend's house - Stir in 3 places; Ambulance glass breakage

வத்தலக்குண்டு அருகே, கள்ளக்காதலி வீட்டில் விவசாயி மர்ம சாவு - 3 இடங்களில் மறியல்; ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு

வத்தலக்குண்டு அருகே, கள்ளக்காதலி வீட்டில் விவசாயி மர்ம சாவு - 3 இடங்களில் மறியல்; ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு
வத்தலக்குண்டு அருகே கள்ளக்காதலி வீட்டில் விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் அடைந்த உறவினர்கள், உடலை வாங்க மறுத்து அடுத்தடுத்து 3 இடங்களில் மறியல் செய்தனர். மேலும் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
வத்தலக்குண்டு, 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). விவசாயி. பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடையும் நடத்தி வந்தார். அவருடைய மனைவி விமலா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டனுக்கும், அதே தெருவில் வசிக்கும் விதவையான சுதாவுக்கும் (40) இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், சுதா வீட்டின் மாடியில் தூக்கில் தொங்கியவாறு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருவீடு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே மணிகண்டனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் வத்தலக்குண்டு போலீஸ்நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை, வத்தலக்குண்டு போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். அப்போது ஆர்.டி.ஓ. விசாரணைக்கோரி மணிகண்டனின் உடலை வாங்காமல் ஊர் திரும்ப முயன்றனர்.

மேலும் இது குறித்து உச்சப்பட்டியில் உள்ள உறவினர்களுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து உச்சப்பட்டி பிரிவு ரோடு அருகே உறவினர்கள் சாலைமறியல் செய்தனர். அப்போது அவர்கள், ரோட்டில் கற்கள் மற்றும் குப்பை தொட்டியை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே மணிகண்டனின் உடலை தனியார் ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு உச்சப்பட்டிக்கு போலீசார் வருவதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வத்தலக்குண்டு போலீஸ்நிலையம் அருகே சாலை மறியல் செய்தவர்கள் மீண்டும் திரும்பி வந்து வத்தலக்குண்டு-உசிலம்பட்டி சாலையில் ராஜாநகர் என்ற இடத்தில் ஆம்புலன்சை மறித்து, கல்லால் முன்பக்க கண்ணாடியை உடைத்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உறவினர்களை சமரசம் செய்ய முயன்றனர். அப்போது உறவினர்கள், எங்கள் கையெழுத்து இல்லாமல் எப்படி உடலை ஊருக்கு கொண்டு செல்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மணிகண்டனின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்வதாக எழுதி கொடுத்தால் போராட்டத்தை கைவிடுகிறோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 3 மணி நேரம் நீடித்தது. இதனால் வத்தலக்குண்டுவில் இருந்து உசிலம்பட்டி, திருமங்கலம், விருதுநகர் செல்லும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பின்னர் மாலை 5 மணிக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி சம்பவ இடத்துக்கு வந்து, மணிகண்டனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மணிகண்டன் உடல் மீண்டும் உறவினர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும், பிரேத பரிசோதனை செய்யப்படும் காட்சிகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும் என்றும், பிரேத பரிசோதனை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மணிகண்டனின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படுவதற்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல் உச்சப்பட்டி பிரிவு ரோடு அருகே சாலைமறியல் செய்த உறவினர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.