ஏலகிரிமலையில் முதல் முறையாக நடந்த ‘நீட்’ தேர்வு - 729 மாணவ, மாணவிகள் எழுதினர்


ஏலகிரிமலையில் முதல் முறையாக நடந்த ‘நீட்’ தேர்வு - 729 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 14 Sep 2020 6:15 AM GMT (Updated: 14 Sep 2020 6:32 AM GMT)

ஏலகிரிமலையில் முதல் முறையாக ‘நீட்’ தேர்வு நடந்தது. அதில் 729 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர்.

ஜோலார்பேட்டை,

தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ‘நீட்’ தேர்வு நடந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலையில் முதல் முறையாக நேற்று நீட் தேர்வு நடந்தது. அதில் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் உள்ள தொன் போஸ்கோ கல்லூரியில் 729 மாணவ, மாணவிகள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பெற்றோருடன் வந்து ‘நீட்’ தேர்வை எழுதினர்.

ஏலகிரி மலையில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தும்,முகக் கவசம் அணிய வைத்தும், கைகளில் கிருமி நாசினி பயன்படுத்திய பிறகு மையத்துக்குள் அனுமதித்தனர். 171 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. மாணவ, மாணவிகள் தங்களின் ஹால் டிக்கெட், பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டையை காண்பித்ததும் ஏலகிரி மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகள், மலையில் வசிக்கும் உள்ளூர் மக்களை தவிர மற்ற யாருக்கும் ஏலகிரி மலைக்கு செல்ல நேற்று அனுமதியில்லாததால் சுற்றுலா வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தேர்வு எழுத வந்தவர்களில் பலர் முன்னதாகவே வந்து விடுதிகளில் தங்கி விட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி தனது பெற்றோருடன் தேர்வு எழுத காரில் வந்தார். மலைப்பாதையில் 10-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது திடீரெனக் கார் பழுதானதால் நடுவழியிலேயே தவித்தார். மலைப்பாதையில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக வேறொரு காரில் வந்த ஒரு மாணவியோடு பிரியதர்ஷினியை தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.

மாணவியின் பெற்றோரை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவர் தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மாணவி தேர்வு எழுதிய மையத்தில் விட்டு விட்டார். ஏலகிரி மலையில் நேற்று காலை முதலே மழை பெய்ய தொடங்கியதால் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து நீட் தேர்வை எழுதினர்.

தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் சிவன்அருள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கி, தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளே செல்லும்போது ஆதார் அட்டை, ஹால் டிக்கெட், போட்டோ ஆகியவைகளை தவிர மற்ற ஆவணங்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

பல்வேறு இடையூறுகளை கடந்து 10 நிமிடம் காலதாமதமாக வந்த விழுப்புரம், குடியாத்தம் பகுதிகளை சேர்ந்த 3 மாணவர்களை மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்களில் சிலர் வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது என்றும், சிலர் ஈசியாக இருந்தது என்றும் கூறினர்.

ஏலகிரி மலைக்கு வந்த மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ஏலகிரி மலையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மூலம் மலையேறி வரும்போது, எங்களுக்கு முன் அனுபவம் இல்லாததால் ஆங்காங்கே வாகனங்கள் பழுது ஏற்பட்டது. மலையேறிய அனுபவம் மிக சிரமத்தை ஏற்படுத்தியது. இனிமேல், ஏலகிரி மலையில் தேர்வு மையம் அமைக்க வேண்டாம், என்றனர்.

வாணியம்பாடியில் உள்ள மருதர்கேசரி ஜெயின் கல்லூரியில் நீட் தேர்வு நடந்தது. 748 மாணவர்கள் தேர்வு எழுதினர். வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியம், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் ஆகியோர் தலைமையில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தேர்வு மையத்தை கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தேர்வு எழுத வந்திருந்த மாணவர்களுக்கு கலெக்டர் சிவன்அருள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நீட்தேர்வு நடந்தது. ராணிப்பேட்டை பெல் டி.ஏ.வி.பள்ளி, ஆற்காடு அருகே விஷாரத்தில் உள்ள குளோபல் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. டி.ஏ.வி.பள்ளியில் 275 பேர் தேர்வு எழுதினர், 85 பேர் தேர்வு எழுத வரவில்லை. குளோபல் என்ஜினீயரிங் கல்லூரியில் 152 பேர் தேர்வு எழுதினர், 57 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் கடும் பரிசோதனைக்கு பின்னர் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். வளையல், வாட்ச், சங்கிலி ஆகிய ஆபரணங்களை அணிந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். தேர்வு மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பெல் டி.ஏ.வி.பள்ளி மையத்தை ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், வாலாஜா தாசில்தார் பாக்கியநாதன், வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் தலைமையில் ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story