குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Sept 2020 4:30 AM IST (Updated: 14 Sept 2020 11:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு குடற்புழுவை நீக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கும் முகாமை, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு குடற்புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கும் பணி தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி திரேஸ்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி குழந்தைகளுக்கு மாத்திரைகளை வழங்கி பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 2-வது முறையாக 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குடற்புழுவை நீக்கும் அல்பென்ட்சோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அனைத்து குழந்தைகளும் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 253 பேருக்கு மாத்திரை வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 907 ஆண் குழந்தைகளுக்கும், 1 லட்சத்து 54 ஆயிரத்து 361 பெண் குழந்தைகள் ஆக மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 268 குழந்தைகளுக்கும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 67 ஆயிரத்து 179 ஆண் குழந்தைகள், 64 ஆயிரத்து 208 பெண் குழந்தைகள் ஆக மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 387 குழந்தைகளுக்கும், மொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 38 ஆயிரத்து 655 குழந்தைகளும் பயன்பெற உள்ளனர்.

அல்பென்ட்சோல் மாத்திரைகள் வழங்கும் முகாம் வழக்கமாக பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள், தாய்மார்கள் இந்த மாத்திரைகளை வாங்கிச்சென்று தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அல்பென்ட்சோல் மாத்திரைகள் வழங்கும் பணிகள் இன்று (அதாவது நேற்று) முதல் 19.9.2020 வரை 3 தினங்களுக்கும், அடுத்தகட்டமாக 21.9.2020 முதல் 26.9.2020 வரை (செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர) நடைபெற உள்ளது.

மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 28-ந் தேதி சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் வீடு வீடாக சென்று குடற்புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எல்லா குழந்தைகளும் சாப்பிட வேண்டும். இதற்கு பெற்றோர்கள் மற்றும் தாய்மார்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

முகாமில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் அனிதா, மாநகராட்சி சுகாதார அலுவலர் அருண்குமார், மருத்துவ அலுவலர் தேவி லாவண்யா, நகர்ப்புற சுகாதார நிலைய செவிலியர் பெர்னத் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story