சுடுகாட்டை ஆக்கிரமித்த தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சுடுகாட்டை ஆக்கிரமித்த தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன் தலைமையில், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சி அண்ணாநகர், டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது அவர்கள் கூறியதாவது.,
எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களாகிய தங்கள் பகுதியில் உள்ள சுடுகாடு மற்றும் சுடுகாட்டுப் பாதையை கன்னிகாபுரம் ஊராட்சி மன்ற தலைவி லட்சுமியின் கணவரும், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலருமான முரளி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
கலெக்டரிடம் மனு
மேலும், அதனை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளனர். இது குறித்து தட்டி கேட்டபோது தங்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுத்து சுடுகாடு மற்றும் சுடுகாட்டு பாதையை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story