மாவட்ட செய்திகள்

போலீஸ் காவல் நிறைவடைந்தது; போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகிணி சிறையில் அடைப்பு - சஞ்சனா கல்ராணியிடம் தீவிர விசாரணை + "||" + Police custody is complete In the case of drugs Arrested actress Ragini Prison closure

போலீஸ் காவல் நிறைவடைந்தது; போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகிணி சிறையில் அடைப்பு - சஞ்சனா கல்ராணியிடம் தீவிர விசாரணை

போலீஸ் காவல் நிறைவடைந்தது; போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகிணி சிறையில் அடைப்பு - சஞ்சனா கல்ராணியிடம் தீவிர விசாரணை
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகை ராகிணி திவேதியின் போலீஸ் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நடிகை சஞ்சனா கல்ராணியை போலீசார் மீண்டும் காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதைப்பொருள் விற்பனையாளர்கள் வீரேன் கண்ணா, பிரசாந்த் ரங்கா, வைபவ் ஜெயின், நயாஸ், லோயம் பெப்பர் சம்பா, ஆதித்யா அகர்வால், பிரதிக் ஷெட்டி ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 9 பேரை போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது நடிகைகள் 2 பேரும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், நடிகைகள் உள்பட 9 பேரின் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. குறிப்பாக நடிகை ராகிணி திவேதியிடம் கடந்த 4-ந் தேதியில் இருந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவரை 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு இருந்தது. நடிகை சஞ்சனா கல்ராணியும் கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டு இருந்தார். அவரிடம் 7 நாட்கள் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டு இருந்ததால், சஞ்சனா கல்ராணியை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் காவலில் எடுக்க விசாரிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இதற்கிடையில், நடிகைகளின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து மல்லேசுவரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன்பிறகு, மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்திற்கு 2 பேரும் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் நேற்று மதியம் பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ஜெகதீஷ் முன்னிலையில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, பிரசாந்த் ரங்கா, ராகுல், ரவிசங்கர், நியாஸ், லோயம் பெப்பர் சம்பா, வீரேன் கண்ணா ஆகிய 8 பேரும் காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நடிகை ராகிணி திவேதி, பிரசாந்த் ரங்கா, லோயம் பெப்பர் சம்பா, ராகுல், நியாஸ் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி போலீசார் தகவல்களை சேகரித்திருந்ததால், அவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முன்வரவில்லை. இதையடுத்து, நடிகை ராகிணி திவேதி உள்பட 5 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஜெகதீஷ் உத்தரவிட்டார். அதே நேரத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணியிடம் மேலும் விசாரணை நடத்த 5 நாட்கள் காலஅவகாசம் வழங்கும்படி போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்கு நடிகை சஞ்சனா கல்ராணி தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சஞ்சனா கல்ராணி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவதால், அவரை மீண்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க கூடாது என்று அவரது வக்கீல் வாதிட்டார். ஆனால் போதைப்பொருள் விவகாரத்தில் போலீஸ் காவலில் இருந்த போது நடிகை சஞ்சனா கல்ராணி ஒத்துழைப்பு வழங்க மறுத்து விட்டதாகவும், அவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதால், அதுபற்றி விசாரிக்க மேலும் 5 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ், நடிகை சஞ்சனா கல்ராணியிடம் வருகிற 16-ந் தேதி (அதாவது நாளை) வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதுபோல, நடிகை ராகிணி திவேதியின் நண்பர் ரவிசங்கர், போதைப்பொருள் விற்பனையாளர் வீரேன் கண்ணாவையும் வருகிற 16-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி ஜெகதீஷ் உத்தரவிட்டு இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, நடிகை சஞ்சனா கல்ராணியிடம் நேற்று மாலை வரை போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர். இன்றும் (செவ்வாய்க்கிழமை) அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது. அதே நேரத்தில் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் மந்திரியின் மகன் ஆதித்யா ஆல்வா, சேக் பாசில் உள்ளிட்டோரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில், நடிகை ராகிணி திவேதியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்ததால், மடிவாளாவில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோல, பிரசாந்த் ரங்கா, லோயம் பெப்பர் சம்பா, ராகுல், நயாஸ் உள்ளிட்டோரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் கன்னட திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளதால், இன்னும் 2 நாட்கள் அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை
போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று, அவர்கள் 2 பேருக்கும் மல்லேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. நடிகை ராகிணி திவேதி நேற்று பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற அறிக்கை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. சிறையில் மற்ற கைதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக புதிதாக வரும் விசாரணை கைதிகள், சிறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். அதுபோல் அந்த புதிய அறையில் நடிகை ராகிணி திவேதி அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.