தனியார் மயத்துக்கு எதிர்ப்பு: மின்துறை ஊழியர்கள் போராட்டம்


தனியார் மயத்துக்கு எதிர்ப்பு: மின்துறை ஊழியர்கள் போராட்டம்
x

தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

மின்துறை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதையொட்டி முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மின் துறை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு புதுவையில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி மின்துறையை தனியார்மயமாக்க அனுமதிக்க மாட்டோம் என புதுவை சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் நேற்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மின்துறை தொடர்பான மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று வலியுறுத்தி மின்துறை பொறியாளர், தொழிலாளர், தனியார் மயம், கார்ப்பரேசன் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் தொடர் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர்.

அதன்படி புதுவை மின்துறை தலைமை அலுவலகம் முன்பு மின்துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தியபடி கலந்துகொண்டனர். மின்துறை தனியார் மய எதிர்ப்புக்குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதிவாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அடுத்ததாக வருகிற 21-ந்தேதி நகர பகுதியில் 5 இடங்களில் இருந்து மின்துறை ஊழியர்கள் ஊர்வலமாக சென்று கவர்னரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டு உள்ளனர்.

Next Story