புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்கு தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கின


புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்கு தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கின
x
தினத்தந்தி 15 Sep 2020 1:23 AM GMT (Updated: 15 Sep 2020 1:23 AM GMT)

புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்கு தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கின.

புதுக்கோட்டை,

கொரோனா ஊரடங்கின் காரணமாக பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நாளில் இருந்து தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வில் பஸ்களை இயக்க அனுமதித்த போதும், தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் பஸ்களை இயக்க சம்மதிக்கவில்லை. குறைந்த பயணிகளுடன் பஸ்களை இயக்கினால் தங்களுக்கு கட்டுப்படியாகாது என தெரிவித்தனர்.

அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. அதன்பின் தற்போது இந்த மாதத்தில் அளிக்கப்பட்ட தளர்விலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன. புதுக்கோட்டையிலும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கின.

மதுரை வழித்தடம்

புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்கு அதிகாலை 5.10 மணி, அதிகாலை 5.55 மணி, பகல் 12.10 மணி, மதியம் 2 மணி, மாலை 5.20 மணி ஆகிய நேரங்களில் தனியார் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. இதில் பஸ்சில் பயணிகள் ஏறி பயணம் செய்தனர். குறிப்பிட்ட 3 தனியார் நிறுவனத்தினர் மட்டும் மதுரை வழித்தடத்தில் பஸ்களை இயக்க தொடங்கி உள்ளனர். படிப்படியாக மற்ற தனியார் பஸ்களும் இயக்கப்படும் எனக்கூறப்படுகிறது. அரசு பஸ்கள் தற்போது 60 முதல் 65 சதவீதம் வரை இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

அன்னவாசல்

இதேபோல் புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி வழியாக தனியார் டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதனால் கிராமபுற மக்கள் தங்களது வேலை காரணமாக புதுக்கோட்டைக்கு தனியார் பஸ்சில் பயணம் செய்தனர். இதுபோன்று அனைத்து தனியார் பஸ்களையும் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story