கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் மடிக்கணினி கேட்டு மனு


கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் மடிக்கணினி கேட்டு மனு
x
தினத்தந்தி 15 Sept 2020 6:57 AM IST (Updated: 15 Sept 2020 6:57 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் மடிக்கணினிகேட்டு மனு அளித்தனர்.

கரூர்,

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கம் பொருட்டு மக்கள் தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு அந்த அந்த தாலுகா அலுவலகங்களிலேயே பொது மக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து, அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, கடவூர் வட்டம் வீரியபட்டியை சேர்ந்த வாலிபர்கள் போட்ட மனுவில், எங்கள் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் இனத்தை சேர்ந்த 54 பேர் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகிறோம், வீடு கட்டவும் இடம் இல்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

பெரிய குளத்தை தூர்வார...

மேட்டுப்பட்டியை சேர்ந்த அப்புசாமி தலைமையில் வந்த பொதுமக்கள் போட்ட மனுவில், வெள்ளியணை பெரிய குளம் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் தூர் வாரப்படாமல் உள்ளதால், முட்கள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் வழங்க உத்தரவிட்டால் குளத்தை சுத்தம் செய்து விவசாயம் செய்து பயன் அடைவார்கள். தண்ணீர் தேங்கும் காலத்தில் நிலத்தை ஒப்படைத்து விடுவோம் எனவும் கூறியிருந்தனர். அவர்கள் போட்ட மற்றொரு மனுவில், நடுமேட்டுப்பட்டியில் குடிநீர் இன்றி மக்கள் தவித்து வருவதாகவும், எனவே உடனடியாக ஆழ் குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மடிக்கணினி வேண்டும்

அரங்கநாதன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2017 மற்றும் 2018-ம் ஆண்டு படித்த மாணவ-மாணவிகள் போட்ட மனுவில், நாங்கள் மேற்கண்ட பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்தோம். எங்கள் 63 பேருக்கும் அரசால் வழங்கப்படும் மடிக்கணினிகள் இதுநாள் வரை தரவில்லை. எனவே மடிக்கணினியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Next Story