1 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட 5.20 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்


1 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட 5.20 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 15 Sep 2020 2:00 AM GMT (Updated: 15 Sep 2020 2:00 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட 5 லட்சத்து 20 ஆயிரத்து 12 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் தேசிய குடற்புழு நீக்கம் மற்றும் ஊட்டசத்து வார விழா நேற்று நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி குத்துவிளக்கேற்றி வைத்து குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-

தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின் கீழ் தேசிய குடற்புழு நீக்கும் தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5 லட்சத்து 20 ஆயிரத்து 12 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இந்த முகாம் 2 சுற்றுகளாக நடைபெற உள்ளது.

அறிவுறுத்த வேண்டும்

குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைப்பாடு சோர்வு மற்றும் சுகவீனம் படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்தசோகை, குமட்டல், வாந்தி ஆகியவை குழந்தைகளுக்கு ஏற்படுவதை தடுக்க 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையை சுகாதாரத்துறை சார்ந்த கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு உட்கொள்ள தகுந்த அறிவுரை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு மாத்திரையை கொடுத்து நன்றாக மென்று சாப்பிடுவதற்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர். கோவிந்தன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் செந்தில்குமார், உதவி கலெக்டர் கற்பகவள்ளி, நகராட்சி ஆணையாளர் சந்திரா, சுகாதார ஆய்வாளர் மோகன் சுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். இனியாள் மண்டோதரி, தாசில்தார் வெங்கடேசன், குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜோதிலட்சுமி மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Next Story