ஊட்டியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி


ஊட்டியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Sep 2020 2:55 AM GMT (Updated: 15 Sep 2020 2:55 AM GMT)

ஊட்டியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தினை முன்னிட்டு அல்பென்டசோல் கிருமி நீக்க மாத்திரைகளை குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டி டேவிஸ்டேல் அங்கன்வாடி மையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி குழந்தைகளுக்கு அல்பென்டசோல் கிருமி நீக்க மாத்திரைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்தியாவில் தேசிய குடற்புழு நீக்க நாள் முதல் சுற்று நேற்று முதல் 19-ந் தேதி வரையிலும், இரண்டாம் சுற்று செப்டம்பர் 21-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையிலும் அனுசரிக்கப்படுகிறது. இதில் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள அனைவருக்கும் அல்பென்டசோல் கிருமி நீக்க மாத்திரை வழங்கப்படும். ஒரு வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மில்லி அல்பென்டசோல் திரவமும், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படுகிறது.

உடல் ஆரோக்கியம்

நீலகிரி மாவட்டத்தில் இந்த மாத்திரை அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 சுற்றுகளாக வழங்கப்படுகிறது.

429 அங்கன்வாடி பணியாளர்கள், 179 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 383 ஆஷா பணியாளர்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் நேரடியாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 223 குழந்தைகள் பயன் பெறுவார்கள். அல்பென்டசோல் மாத்திரையை உட்கொள்வதால் குடற்புழு நீக்கம் செய்யப்படுவதுடன், குழந்தைகளின் ரத்த சோகை நீங்கி நன்றாக உணவு உட்கொள்ளவும், மாணவர்கள் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவும்.

எனவே தாய்மார்கள் முதல் மற்றும் இரண்டாம் சுற்றில் வழங்கப்படும் அல்பென்டசோல் மாத்திரைகளை தங்களது குழந்தைகளுக்கு வழங்கி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உறுதுணையாக இருக்க வேண்டும். தற்போது கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் பொதுமக்கள் அரசு தெரிவித்து உள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துண்டு பிரசுரங்கள்

தொடர்ந்து குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story