விதிமுறையை மீறி இயங்கிய 2 குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைப்பு


விதிமுறையை மீறி இயங்கிய 2 குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 16 Sept 2020 3:30 AM IST (Updated: 15 Sept 2020 10:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறையை மீறி இயங்கிய 2 குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தூத்துக்குடி,

உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து 300 மில்லி, 500 மில்லி, ஒரு லிட்டர் மற்றும் 20 லிட்டர் குடிநீர் பாட்டில்களை உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் குடிநீர் நிறுவனங்களில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்தனர். கடந்த 2 நாட்களில் 25 நிறுவனங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

இந்த மாதிரி சேகரிப்பின்போது, ஆழ்வார்திருநகரி குறிப்பன்குளத்தில் உள்ள ஒரு குடிநீர் விற்பனை நிறுவனமும், ஸ்ரீவைகுண்டம் ஆயத்துறையில் உள்ள ஒரு குடிநீர் விற்பனை நிறுவனமும் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படுவது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்களை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் மூடி ‘சீல்’ வைத்தார்.

Next Story