முன்னாள் ராணுவ வீரரை பா.ஜனதா எம்.பி. தாக்கியது குறித்து விசாரணை உள்துறை மந்திரி உத்தரவு


முன்னாள் ராணுவ வீரரை பா.ஜனதா எம்.பி. தாக்கியது குறித்து விசாரணை உள்துறை மந்திரி உத்தரவு
x
தினத்தந்தி 16 Sept 2020 4:10 AM IST (Updated: 16 Sept 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ராணுவ வீரரை பா.ஜனதா எம்.பி. தாக்கியது குறித்து விசாரணை நடத்த உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

ஜல்காவை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சோனு மகாஜன். இவரை கடந்த 2016-ம் ஆண்டு அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த பா.ஜனதாவை சேர்ந்த உன்மேஷ் பட்டேல் அவரது ஆதரவாளர்களுடன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு கடந்த 2019-ம் ஆண்டு தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ முன்னாள் ராணுவ வீரர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜல்காவ் போலீஸ் சூப்பிரண்டை சம்பவம் குறித்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன் “ என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் கேலிசித்திரத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்தற்காக தாக்கப்பட்டார். இதுதொடர்பாக பா.ஜனதா போராட்டத்தை அடுத்து சிவசேனாவினர் 6 பேரை போலீசார் நேற்று மீண்டும் கைது செய்தனர்.

இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் ராணுவ வீரர் தாக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உன்மேஷ் பட்டேல் தற்போது எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story