அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு 18-ந் தேதி தொடங்குகிறது


அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு 18-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 16 Sep 2020 12:11 AM GMT (Updated: 16 Sep 2020 12:11 AM GMT)

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு 18-ந் தேதி தொடங்குகிறது. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது.

ஈரோடு,

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசுக்கு ஒப்புவித்த இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு மாநில அளவிலான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வருகிற 18-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக விண்ணப்பித்து உள்ள விண்ணப்பதாரர்களுக்கு 16-ந் தேதி (இன்று) தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவை தேர்வு செய்வதற்காக குறுந்தகவல் அனுப்பப்படும். அனைத்து பிரிவினருக்கும் 18-ந் தேதி மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

18-ந் தேதியும், 19-ந் தேதியும் முன்னுரிமைதாரர்களுக்கும், 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. இதில் அவரவர் விருப்பமுள்ள 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை தேர்வு செய்யவும், மாறுதல் செய்யவும், ஒதுக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம், பிரிவுகளை உறுதி செய்யவும் அவகாசம் வழங்கப்படும். 20-ந் தேதி முன்னுரிமை கோரும் விண்ணப்பதாரர்களுக்கும், 26-ந் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப உறுதி செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம், பிரிவுகளுக்கு தற்காலிக சேர்க்கை ஆணை வெளியிடப்படும்.

மேலும், 21-ந் தேதியும், 22-ந் தேதியும் முன்னுரிமைதாரர்களும், 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பொதுப்பிரிவில் தற்காலிக ஆணை பெற்றவர்களும் ஆன்லைன் மூலமாக சேர்க்கை கட்டணத்தை செலுத்தி சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம். எனவே விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறிஉள்ளார்.

Next Story