கோழித் தீவனத்திற்காக சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


கோழித் தீவனத்திற்காக சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 16 Sep 2020 1:26 AM GMT (Updated: 16 Sep 2020 1:26 AM GMT)

கோழித்தீவனம் மற்றும் முறுக்குப்போடுவதற்காக சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2,200 கிலோ அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி,

திருச்சியிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் அடிக்கடி கடத்தப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் திருச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று திருச்சி, தென்னூர் அண்ணாநகர் பகுதியில் சரக்கு வேன் ஒன்றில், குடிமைப் பொருள் வினியோகத் திட்டத்தின் வழங்கப்படும் அரிசி மூட்டைகள் கடத்தவிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

2,200 கிலோ அரிசி

அதன் பேரில் உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சரக்கு வேன் அங்கிருந்து காவரி பாலம் நோக்கி செல்வது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் விரைந்து வந்து காவிரி ஆற்றுப்பாலத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்ற சரக்கு வேனை மடக்கி பறிமுதல் செய்தனர். ஆய்வின்போது, சுமார் 2,200 கிலோ ரேஷன் அரிசி மூட்டை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

கோழித்தீவனம், முறுக்கு

விசாரணையில், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் கோழிப்பண்ணைகளில் வழங்கப்படும் கோழித்தீவனம் தயாரிக்கவும், சிறிய ஓட்டல்களில் முறுக்கு போட்டு விற்பனை செய்யவும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரி டிரைவர் தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த அய்யப்பன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story