30 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு: ரூ.13 கோடியில் தூய்மையாகும் குப்பை கிடங்கு ராட்சத எந்திரங்கள் மூலம் பணிகள் தீவிரம்


30 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு: ரூ.13 கோடியில் தூய்மையாகும் குப்பை கிடங்கு ராட்சத எந்திரங்கள் மூலம் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 16 Sep 2020 4:44 AM GMT (Updated: 16 Sep 2020 4:44 AM GMT)

ரூ.13 கோடி செலவில் திண்டுக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கை தூய்மைப்படுத்தும் பணி, ராட்சத எந்திரங்கள் மூலம் நடக்கிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. அவை மூலம் தினமும் சுமார் 100 டன் குப்பைகள் சேருகின்றன. இந்த குப்பைகள் அனைத்தும் திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள முருகபவனம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. இந்த குப்பை கிடங்கு 12½ ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு கடந்த 30 ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டது.

இதனால் சுமார் 10 அடி உயரத்துக்கு குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதற்கிடையே குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளாகினர். எனவே, குப்பை கிடங்கை மாற்றும்படி மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பொன்மாந்துறை அருகே குப்பை கிடங்கை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு பொன்மாந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தூய்மைப்படுத்தும் பணி

இதனால் பொன்மாந்துறையில் குப்பை கிடங்கு அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம்பிரித்து மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து திண்டுக்கல்லில் 9 இடங்களில் உரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 இடங்களில் உரப்பூங்கா அமைக்கப்படுகிறது.

மேலும் அந்தந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், உரப்பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகிறது. இதனால் முருகபவனம் குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டது. அதோடு முருகபவனம் குப்பை கிடங்கை தூய்மைப்படுத்தி பிறபயன்பாட்டுக்கு கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது.

ரூ.13 கோடியில் திட்டம்

அதன்படி முருகபவனம் குப்பை கிடங்கில் இருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தும் பணி, தனியாருக்கு வழங்கப்பட்டது. இதற்காக ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் குப்பை கிடங்கில் 10 அடி உயரத்துக்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சக்திவாய்ந்த மோட்டார்கள் பொருத்திய ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் மண், கல், பிளாஸ்டிக் கழிவுகள், மின்சாதன கழிவுகள் மற்றும் உரம் ஆகியவை என தனித்தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது. மண் மற்றும் கல் ஆகியவை கைவிடப்பட்ட கல்குவாரியில் கொட்டப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைகளில் எரிப்பதற்கு அனுப்பப்படுகிறது. மேலும் மக்கி உரமாக மாறியவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

புல், மரம் வளர்ப்பு

இதன்மூலம் இன்னும் 2 ஆண்டுகளில் குப்பை கிடங்கு முழுமையாக தூய்மையாகி விடும். அதேநேரம் 30 ஆண்டுகளுக்கு மேலாக குப்பைகள் தேங்கி கிடந்ததால், மண்ணின் தன்மை மாறி, பூமிக்குள் விஷவாயு உருவாகியிருக்கும். அதை மாற்றும் வகையில் பழைய மண் அள்ளப்பட்டு, புதிதாக மண் கொட்டி சமபடுத்தப்படும். அதில் புல்தரை அமைத்து, மரங்கள் வளர்க்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

மேலும் ஒருசில ஆண்டுகள் கழித்து அந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 30 ஆண்டுகளாக துர்நாற்றம் வீசிய குப்பை கிடங்கு, பசுமையாக மாறும். அதன்மூலம் குப்பை கிடங்கு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story