திருவண்ணாமலை புறவெளிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் - மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது
திருவண்ணாமமலையில் புறவழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்டு அளவீடு செய்யப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அது மட்டுமின்றி பவுர்ணமி கிரிவலம் செல்லவும் லட்சகணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவண்ணாமலை நகரின் முக்கியமான 9 சாலைகளின் சந்திப்புகளில் ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அதனால் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களும், நகருக்குள் செல்லவும், மத்திய பஸ் நிலையம் சென்றடையும் அனுமதிக்கப்படுவதில்லை. வரும் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் திருவண்ணாமலை நகரை சுற்றிலும் புறவழிச்சாலை (ரிங்ரோடு) அமைக்கும் திட்டம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதன் மூலம் வேலூர் சாலை, அவலூர்பேட்டை சாலை, திண்டிவனம் சாலை, திருக்கோவிலூர் சாலை ஆகியவற்றை அரை வட்டமாக இணைக்கும் புறவழிச்சாலை முதற்கட்ட திட்டமாகவும், வேலூர் சாலை, காஞ்சி சாலை, செங்கம் சாலை, தண்டராம்பட்டு சாலை, மணலூர்பேட்டை சாலை, திருக்கோவிலூர் சாலையை அரை வட்டமாக இணைக்கும் புறவழிச்சாலை 2-வது கட்ட திட்டமாக செயல்படுத்தப்பட்டது.
இதன் மூலம் நிலம் கையகப்படுத்துதல், தரைப் பாலங்கள் அமைத்தல், மேம்பாலம் அமைத்தல், சாலை பணிகள் என பல்வேறு கட்டங்களாக புறவழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. சில இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. சில இடங்களில் நிலம் அளவீடு செய்யப்பட்டு கையகப்படுத்த படாமலும் இருந்து வருகிறது. இந்த திட்டத்திற்காக அளவீடு செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் அந்த இடத்தை விற்கவும் முடியாமல், பயன்படுத்தவும் முடியாமல் தவித்து வந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தின் உரிமையாளர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் அடிஅண்ணாமலை மற்றும் அத்தியந்தல் பகுதியில் புறவழிச் சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டு அளவீடு செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுடன் நிலத்திற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேல் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமை தாங்கி பேசினார். இதில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, நிலஎடுப்பு தாசில்தார் பெருமாள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், 100-க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான மதீப்பிட்டு தொகை வழங்க வருவாய்த் துறை அலுவலர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story