வேலூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு வியாபாரி உள்பட 7 பேர் பலி


வேலூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு வியாபாரி உள்பட 7 பேர் பலி
x
தினத்தந்தி 16 Sept 2020 3:00 PM IST (Updated: 16 Sept 2020 2:47 PM IST)
t-max-icont-min-icon

வேலூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு வியாபாரி உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

வேலூர்,

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஆந்திரா, கர்நாடக, மேற்குவங்காளம் உள்ளிட்ட பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அரசு, தனியார் மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். அதன்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட 3 பேர் நேற்று உயிரிழந்தனர். அவர்களின் விவரம் வருமாறு:-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் மசூத்அகமது (வயது 46). இவர் கடந்த மாதம் 27-ந் தேதி கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

இதேபோன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகேயுள்ள லாடாவரத்தை சேர்ந்த சின்னப்பா (58) என்பவர் கடந்த 12-ந் தேதியும், ஆந்திர மாநிலம் கடப்பா வீரமாலபென்னு பகுதியை சேர்ந்த ராமசின்னா (43) கடந்த 13-ந் தேதியும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் ஆந்திரமாநில சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் உடல்களும் முழுபாதுகாப்புடன் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஹாயத் நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (74). இவர், திருப்பத்தூர் பகுதியில் வெல்லம் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதே போல திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 40 வயது ஆண், 70 வயது முதியவர், 60 வயது மூதாட்டி ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதன்படி மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story