ஜோலார்பேட்டை அருகே, கார் டிரைவர் வீட்டில் ரூ.7 லட்சம் பொருட்கள் திருட்டு - 6 கிலோ வெள்ளி, திருமண சீர்வரிசைகளை அள்ளிச்சென்றனர்


ஜோலார்பேட்டை அருகே, கார் டிரைவர் வீட்டில் ரூ.7 லட்சம் பொருட்கள் திருட்டு - 6 கிலோ வெள்ளி, திருமண சீர்வரிசைகளை அள்ளிச்சென்றனர்
x
தினத்தந்தி 16 Sept 2020 4:00 PM IST (Updated: 16 Sept 2020 3:44 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே கார் டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ வெள்ளி மற்றும் திருமண சீர்வரிசை பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

ஜோலார்பேட்டை,

வாணியம்பாடியை அடுத்த மிட்டூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். கார் டிரைவர். இவருக்கு ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் எம்.ஜி.ஆர். நகரில் சொந்த வீடு உள்ளது. இவரது மகன் அருண் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதனால் அனைவரும் கருப்பனூரில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர் வீட்டில் வசித்து வந்தனர். மேலும் தனது மகன், மருமகள் இருவரும் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதால் சண்முகம் மற்றும் இவரது மனைவி ஆகியோர் மட்டும் இங்கு தங்கியிருந்தனர். கடந்த மாதம் கருப்பனூர் பகுதி கொரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் இங்குள்ள வீட்டை பூட்டிவிட்டு, கொரோனாவிற்கு பயந்து சண்முகம் மிட்டூரில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை கருப்பனூரில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக சண்முகத்துக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சண்முகம் சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மகனின் திருமணத்திற்கு சீர்வரிசையாக வழங்கப்பட்ட 6 கிலோ வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த டி.வி., மிக்சி, கிரைண்டர், அண்டா, குத்துவிளக்கு உள்ளிட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான அனைத்து பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சண்முகம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை கொடுத்த புகாரின் பேரில், பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story