பரமக்குடி அருகே பலாத்காரம் செய்து பெண் கொலை: 10 மாதங்களுக்கு பின்பு சிக்கிய டிரைவர்


பரமக்குடி அருகே பலாத்காரம் செய்து பெண் கொலை: 10 மாதங்களுக்கு பின்பு சிக்கிய டிரைவர்
x
தினத்தந்தி 16 Sept 2020 5:00 PM IST (Updated: 16 Sept 2020 4:47 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே பலாத்காரம் செய்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 10 மாதங்களுக்கு பின்பு லாரி டிரைவர் கைதாகி உள்ளார். இதுகுறித்த பரபரப்பு தகவல்களும் தெரியவந்துள்ளன.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் அருகே ஒரு கிராமத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வயல் வேலைக்கு சென்ற 55 வயது பெண் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அந்த பெண் சகதியில் மூழ்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 1½ பவுன் தங்க நகை கொள்ளை போய் இருந்தது. இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 10 மாதங்களாக இந்த கொலை பற்றிய விசாரணை நடந்து வந்தது. கொலையாளியை கண்டுபிடிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகணேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சம்பவத்தன்று அந்த பெண் வயல் வேலைக்கு தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக தீயனூர் காலனியை சேர்ந்த லாரி டிரைவர் ரவி (36) சென்று இருக்கிறார். குடிபோதையில் அந்த பெண்ணை ஆசைக்கு இணங்க அழைத்துள்ளார். அதற்கு மறுத்த அவரை ரவி அருகில் கிடந்த மரக் கட்டையால் தலையில் தாக்கி உள்ளார். இதில் அந்த பெண் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்து விட்டார். பின்னர் ரவி அவரை பலாத்காரம் செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 1½ பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் துப்புதுலக்கி ரவியை கண்காணித்து வந்துள்ளனர். இதைதொடர்ந்து அவரை நேற்று கைது செய்தனர்.

அவரிடம் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நேரில் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் போது அருகில் நின்று இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story