காரைக்குடியில் பட்டப்பகலில் 8 பேர் வெறிச்செயல்: மெக்கானிக் கொலை; நண்பருக்கு வெட்டு - மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட தகராறு கொலையில் முடிந்தது


காரைக்குடியில் பட்டப்பகலில் 8 பேர் வெறிச்செயல்: மெக்கானிக் கொலை; நண்பருக்கு வெட்டு - மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட தகராறு கொலையில் முடிந்தது
x
தினத்தந்தி 16 Sept 2020 5:00 PM IST (Updated: 16 Sept 2020 4:51 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் பட்டப்பகலில் மெக்கானிக் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காரைக்குடி, 

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள நந்தியாகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). மெக்கானிக்கான இவர், திருவாடானையில் இருசக்கர வாகன ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார்.

இவர் வாகன உதிரிபாகங்கள் வாங்குவதற்காக நேற்று மோட்டார் சைக்கிளில் காரைக்குடி சென்றார். அங்கு வள்ளலார் நகரைச் சேர்ந்த தனது நண்பர் சண்முகதுரையை சந்தித்து அவரையும் அழைத்துக்கொண்டு, காரைக்குடி வ.உ.சி. சாலையில் உள்ள கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டனர்.

பின்னர் முத்துப்பட்டினம் சினிமா தியேட்டர் அருகே சென்றனர். அப்போது வேகமாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் சென்றவரை பார்த்து விக்னேஷ் சத்தம் போட்டுள்ளார்.

இதனால் அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற சிவா என்ற வாலிபர் திரும்பி வந்து விக்னேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது. அதன்பின் சிவா சென்றுவிட்டார்.

விக்னேசும், சண்முகதுரையும் மோட்டார் சைக்கிளில் முத்துப்பட்டினம் அரசு பள்ளி அருகே மதியம் 1.30 மணி அளவில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது சிவாவும், அவருடைய கூட்டாளிகள் என மொத்தம் 8 பேர், 4 மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். அவர்கள் விக்னேஷ் மற்றும் அவருடைய நண்பரை வழிமறித்து ஆபாசமாக பேசி, அவர்களை தாக்கியதோடு மீன் வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டியதாக தெரியவருகிறது.

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தில் தலை மற்றும் உடலில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து விக்னேஷ் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சண்முகதுரை படுகாயம் அடைந்தார்.

இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்ததை பார்த்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சண்முகதுரைக்கு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விக்னேசின் உடல் பரிசோதனைக் காக அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிவா மற்றும் அவரது நண்பர்கள் என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். இந்த கொலை குறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றவரை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story