விவசாய நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: 30 சதவீத பணம் மட்டுமே திரும்ப பெறப்பட்ட நிலை - உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் முறைகேடாக பெறப்பட்ட நிதியில் 30 சதவீதம் மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் இந்த முறைகேட்டிற்கு உதவியாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் நிலை தொடர்கிறது.
விருதுநகர்,
ஏழை-எளிய விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தின்கீழ் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இந்த நிதி உதவி இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கு மூலம் 3 தவணைகளாக பட்டுவாடா செய்யப்படுகிறது. பதிவு செய்வதற்கான வழிமுறைகள் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் அல்லாதவர்களும் முறைகேடாக நிதி உதவி பெற்றதாக புகார் கூறப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேர் இவ்வாறு முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் தமிழக அரசு தற்காலிகமாக இத்திட்டத்தின் கீழ் நிதிஉதவி வழங்கப்படுவதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 2,622 பேர் முறைகேடாக இந்த நிதி உதவியை பெற்றுள்ளதாக புகார் கூறி மாவட்ட கண்காணிப்புக்குழு தலைவர் மாணிக்கம்தாகூர் எம்.பி. உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து மாவட்ட விவசாயத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விருதுநகர் மாவட்டத்தில் 786 பேர் முறைகேடாக நிதி உதவி பெற்றுள்ளதாகவும், 1786 பேர் வெளி மாவட்டங்களில் முறைகேடாக விவசாயிகள் என பதிவு செய்து இம்மாவட்ட வங்கிகள் மூலம் நிதி உதவி பெற்றுள்ளதாகவும் இவ்வாறு ரூ.90 லட்சம் முறைகேடாக நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முறைகேடாக வழங்கப்பட்ட நிதி உதவியில் 30 சதவீதம் மட்டுமே அதாவது ரூ.26 லட்சம் மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையினை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அதற்கான நடவடிக்கைகள் முனைப்புடன் எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.
மேலும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும், முறைகேடாக பணம் பெற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என தொடர்புடைய துறை அதிகாரியிடம் கேட்ட போது, மாவட்டம் முழுவதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக முறைகேடாக பணம் பெற்றுள்ள நிலை உள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சிரமமாக உள்ளதாகவும், உடந்தையாக இருந்த அதிகாரிகள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பது பற்றியும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முறைகேடு செய்தவர் ஒரு நபராக இருந்தாலும் அவர் மீது புகார் செய்தால் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ள நிலையில் துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் முறைகேடு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டும் நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு இதுபற்றி ஆய்வு செய்ய பல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து முறைகேடாக நிதி பெற்றவர்கள் மீதும், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அதுவரை நிதி பட்டுவாடாவை நிறுத்தி வைக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.
Related Tags :
Next Story