கலெக்டர் அலுவலகத்தில் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சிவகங்கை கலெக்டர் அலுவலக வாசலில் உள்ள அலங்கார வளைவு கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்தனர்.
சிவகங்கை,
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாலா, மாவட்ட செயலாளர் காளீஸ்வரன், நகர் தலைவர் அஜித் செல்வராஜ் மற்றும் பிரவீன், அறிவு மலை ஆகியோர் சிவகங்கை கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் உள்ள அலங்கார வளைவு கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
தகவல் அறிந்ததும் சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கீழே இறங்கி வரும்படி அழைத்தனர்.ஆனால் அவர்கள் இறங்கிவர மறுத்து தொடர்ந்து மேலே நின்று கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தீயணைக்கும் படை அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படையினர் அங்கு வரவழைக்கப் பட்டனர். அவர்கள் ஏணி மூலமாக மேலேநின்று போராடியவர்களை பத்திரமாக கீழே இறக்கி அழைத்து வந்தனர். இந்தப் போராட்டம் சுமார் ½ மணி நேரம் நடைபெற்றது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரையும் நகர் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story