கீழக்கரை அருகே, தபால்காரர் திடீர் தற்கொலை - கடிதம் சிக்கியது


கீழக்கரை அருகே, தபால்காரர் திடீர் தற்கொலை - கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 16 Sep 2020 12:15 PM GMT (Updated: 16 Sep 2020 12:05 PM GMT)

தபால்காரர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கீழவலசையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 45). இவர் காஞ்சிரங்குடியில் கடந்த 21 ஆண்டுகளாக தபால்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் உறவினரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு நகையை வாங்கி அடகு வைத்துள்ளார். இந்நிலையில் அவருடைய உறவினர் நகையை திரும்ப கேட்டுள்ளார். நகையை திருப்பி தரவில்லை என்றால் போலீசில் புகார் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த தபால்காரர் ராமகிருஷ்ணன் நேற்று காலை வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழக்கரை இன்ஸ்பெக்டர் திலகராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். உடலை மீட்டு பரிசோதித்த போது அவரது சட்டைப்பையில் கடிதம் ஒன்று இருந்தது.

அதில் மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு, “தனது சாவுக்கு காரணம் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவரும், உறவினரும்தான்” என அவர்கள் பெயரை எழுதி கையெழுத்திட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை செய்துகொண்டவர் உடல் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
  • chat