மந்தாரக்குப்பம் அருகே, பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மந்தாரக்குப்பம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மந்தாரக்குப்பம்,
மந்தாரக்குப்பம் அருகே உள்ள வீணங்கேனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், தொழிலாளி. இவரது மகள் சுகன்யா (வயது 14). இவர் கடலூரில் உள்ள புனித மாதா நடுநிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்காக அவர் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கூடம் திறக்கப்படாததால், வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வந்தார்.
இதற்கிடையே சம்பவத்தன்று சுகன்யா ஆன்லைன் வகுப்பில் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த கிருஷ்ணகுமார், உன்னை படிக்க வைக்க நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன், அதை புரிந்து கொள்ளாமல் ஏன் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என்று கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையடைந்த சுகன்யா, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story