கொரோனா இறப்பை தடுக்க நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டவுடன் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் - பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
கொரோனா இறப்பை தடுக்க நோய்த்தொற்று தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர்,
கொரோனா தொற்று ஏற்பட்டு இறப்பதை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவர்கள் குறித்து வாரம் 2 முறை ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு வர வேண்டும். நோய்த்தொற்று குறித்து அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், சிகிச்சை வழங்கப்பட்டு பூரண குணமடையலாம்.
சர்க்கரை வியாதி, இருதய நோய் போன்ற நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து உட்கொண்டு வருபவர்கள் மிகவும் கவனமாக இருக்க, அவர்கள் சிகிச்சை பெற்று வரும் டாக்டர்கள் மூலமாகவோ அல்லது சுகாதாரப் பணியாளர்கள் மூலமாகவோ அவர்களுக்கு அறிவுரை வழங்கி கண்காணிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை நோய்த்தொற்று தீவிரமான நேரத்தில் உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இந்திய மருத்துவக்கழக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தகுந்த நேரத்தில் தாமதமின்றி உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பலாம். தனியார் மருத்துவமனைகள் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தொற்று பரிசோதனைகள், சி.டி.ஸ்கேன் போன்ற விவரங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா இறப்புகளை தவிர்க்கும் பொருட்டு அவசர தேவைகளுக்காக 44 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா நோய்த்தொற்று இறப்பை தடுப்பதற்கு பொதுமக்கள் தங்கள் உடலில் அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து, டாக்டர்களின் ஆலோசனை பெற்றுக்கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.
மருத்துவக்குழுவினர்களும் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து அதிக பரிசோதனைகள் மேற்கொண்டு கொரோனா தொற்று இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் இணை இயக்குனர் (மருத்துவம் ) ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கீதா, சுகாதாரத்துறை உதவி திட்ட மேலாளர் கவுதம், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, ராஜா முத்தையா மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story