150 படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மகப்பேறு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
ஊட்டியில் 150 படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மகப்பேறு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சேட் நினைவு அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி ரூ.6 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாய்-சேய் நலம், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, வளர் இளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு ஆகியவற்றுடன் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக இந்த ஆஸ்பத்திரி ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சேட் நினைவு அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கீழ் தளம் மற்றும் முதல் தளத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் உயர் சிகிச்சைக்காக கோவை போன்ற மாவட்டங்களுக்கு சென்று சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நீலகிரியில் சிகிச்சைகளை மேற்கொள்ள ஏதுவாக சேட் நினைவு அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் ரூ.6 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாய்-சேய் நலம், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, வளர் இளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகள் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள வசதிகள் போல் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பிரிவு, வளர் இளம் குழந்தைகள் சிறப்பு பிரிவு, குடும்ப நல சிறப்பு பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிகள் தங்கும் பிரிவு, பெண்களுக்கான நோய் சிகிச்சை பிரிவு, ஆய்வகம், மருந்தகம், எச்.ஐ.வி. பால்வினை நோய் ஆலோசனை மற்றும் சிகிச்சை பிரிவு போன்றவை அமைக்கப்படுகிறது. மேலும் இந்த ஆஸ்பத்திரியில் 150 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாய்-சேய் மருத்துவ நலம் மூலம் ரத்தசோகை மற்றும் எடை குறைவாக உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மற்றும் தாயின் நலத்தினை பேணிக்காக்கும் வகையில் பல்வேறு சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கட்டுமான பணிகளை பார்வையிட்டு தினமும் பணிகளின் விவரங்கள் குறித்து அறிக்கை தர வேண்டும் எனவும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது அரசு தலைமை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ரவிக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story