கூடலூர் பகுதியில் தொடர் மழை: வனதுர்க்கை அம்மன் கோவிலில் ராட்சத தடுப்பு சுவர் இடிந்தது


கூடலூர் பகுதியில் தொடர் மழை: வனதுர்க்கை அம்மன் கோவிலில் ராட்சத தடுப்பு சுவர் இடிந்தது
x
தினத்தந்தி 16 Sept 2020 8:30 PM IST (Updated: 16 Sept 2020 8:38 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் வன துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த ராட்சத தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 1 வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது. தேவாலா, பந்தலூர் உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்வதால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இதேபோல் காற்றும் சில சமயங்களில் பலமாக வீசுவதால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுகிறது இதனால் மின் கம்பிகள் அறுந்து அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பந்தலூரில் 14 மி.மீட்டரும், தேவாலாவில் 13 மி. மீட்டரும், கூடலூர், ஓவேலி பகுதியில் 9 மி.மீட்டரும், சேரன்கோட்டில் 6 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் தொடர் மழையால் கூடலூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள கோவில் வளாகத்தில் இருந்த ராட்சத தடுப்பு சுவர் நேற்று முன்தினம் நள்ளிரவு இடிந்து விழுந்தது. இதனால் மேடான இடத்தில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்குவது போல் காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து வருவாய் துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். மேலும் அப்பகுதியில் வீடுகள் சேதம் அடையாமல் இருக்க தடுப்பு சுவர் கட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியே நடமாட முடியாத அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. வன துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில் மழைக்கு ராட்சத தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. தற்போது கோவில் கட்டுமானப்பணி தொடங்குவதற்காக பகலில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் தடுப்பு சுவர் இரவில் இடிந்து விழுந்ததால் தொழிலாளர்கள் உயிர் தப்பினர். மேலும் மழையும் பெய்து வருவதால் புதிய தடுப்பு சுவர் கட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அப்பகுதியில் வீடுகள் சேதம் அடையும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story