அனைத்து துறையிலும் போதைப்பொருள் பயன்பாடு மந்திரி பி.சி.பட்டீல் அதிர்ச்சி தகவல்


அனைத்து துறையிலும் போதைப்பொருள் பயன்பாடு மந்திரி பி.சி.பட்டீல் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 17 Sept 2020 3:48 AM IST (Updated: 17 Sept 2020 3:48 AM IST)
t-max-icont-min-icon

திரைத்துறை மட்டுமின்றி அனைத்து துறையிலும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளதாக மந்திரி பி.சி.பட்டீல் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

பெங்களூரு,

விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் போதைப்பொருள் குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு முன்பு திரைத்துறையில் போதைப்பொருள் பயன்பாடு இருக்கவில்லை. ஆனால் சமீபத்தில் திரைத்துறைக்கு வரும் இளம் நடிகர்கள், போதைப்பொருள் பயன்படுத்துவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. முன்பு நாங்கள் கேமரா மற்றும் கேமராமேன்களுக்கு வணக்கம் செலுத்துவோம். ஆனால் அந்த கலாசாரம் மாறிவிட்டது. போதைப்பொருளை பயன்படுத்தும் நடிகர்களை ரசிகர்கள் பின்தொடர்ந்தால் அது நாட்டுக்கு கேடு விளைவிக்கும். திரைத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இந்த போதைப்பொருள் பயன்பாடு உள்ளது.

கேசினோ சூதாட்டத்திற்கு வெளிநாடுகளில் அனுமதி உள்ளது. அதனால் ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. அங்கு சென்றிருப்பார். போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருந்தால் அவர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். மந்திரிசபை விரிவாக்கம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எடியூரப்பா யாரையும் கைவிடவில்லை. அவரை நம்பி வந்த அனைவருக்கும் உரிய பதவியை வழங்கியுள்ளார்.

ஜமீர்அகமதுகான் தன் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டை நிரூபித்தால் தனது சொத்துகளை எழுதி கொடுப்பதாக சவால் விட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு பல முறை இத்தகைய சவால்களை விட்டுள்ளார். எடியூரப்பா முதல்-மந்திரி ஆனால் அவரது வீட்டு வாசலில் காவல் காக்கும் பணியை மேற்கொள்வதாக கூறினார். வெறும் விளம்பரத்திற்காக அவர் இவ்வாறு கருத்துகளை தெரிவிக்கிறார். இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.


Next Story