56 ஆயிரம் கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் பயணித்து; ஆன்மிக சுற்றுலா தாயின் ஆசையை நிறைவேற்றிய பாசக்கார மகன் - 33 மாதங்களுக்கு பிறகு மைசூரு வந்தனர்


56 ஆயிரம் கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் பயணித்து; ஆன்மிக சுற்றுலா தாயின் ஆசையை நிறைவேற்றிய பாசக்கார மகன் - 33 மாதங்களுக்கு பிறகு மைசூரு வந்தனர்
x
தினத்தந்தி 16 Sep 2020 10:33 PM GMT (Updated: 16 Sep 2020 10:33 PM GMT)

56 ஆயிரம் கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் பயணித்து ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்று தனது தாயின் ஆசையை பாசக்கார மகன் நிறைவேற்றியுள்ளார். அவர்கள் 33 மாதங்களுக்கு பிறகு நேற்று மைசூருவுக்கு வந்தனர்.

மைசூரு,

இன்றைய காலத்தில் தங்களை தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்த பெற்றோரை, பலர் உதாசீனம் படுத்தி வருகிறார்கள். வயதான காலத்தில் அவர்களை கவனிக்காததால் பெற்றோர்கள் சொல்லொண்ணா துயரில் உள்ள சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதுபோல் பெற்றோர் பாரமாக இருப்பதாக கருதி சிலர் அவர்களை ஆதரவற்ற இல்லங்களில் விட்டு செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

ஆனால் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு பாசக்கார மகன், ஸ்கூட்டரில் 56 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்று வயதான தனது தாயின் ஆசையை நிறைவேற்றிய சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் மைசூரு (மாவட்டம்) நகரை ஒட்டிய போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது தாய் ரத்னம்மா (வயது 70). கிருஷ்ணகுமார் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகுமாரின் தந்தை இறந்துவிட்டார். இதனால் அவரது தாய் ரத்னம்மா, தந்தை இறந்துவிட்டதால் தனிமையை உணருவதாக கிருஷ்ணகுமாரிடம் கூறியுள்ளார். மேலும் தான் ஹாசன் மாவட்டம் பேளூரில் உள்ள ஒலேபீடு கோவிலுக்கு செல்லவில்லை என்றும், வெளிமாநிலங்களுக்கு இதுவரை செல்லவில்லை என்றும் ரத்னம்மா மகனிடம் கூறியுள்ளார்.

இதை கேட்ட கிருஷ்ணகுமார், தனது தாயை இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி கிருஷ்ணகுமார் தனது தாயை ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்றார். அதாவது தனது தந்தை 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ஸ்கூட்டரில் தாயை அமரவைத்து அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார். முதலில் பேளூர் ஒலேபீடு கோவிலுக்கு சென்ற அவர்கள் ஆந்திரா, மராட்டியம், கோவா, புதுச்சேரி, தமிழ்நாடு, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டனர். அங்குள்ள இந்து கோவில்கள், மசூதிகள், பேராலயங்களுக்கு அவர்கள் சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆன்மிக பயணம் செய்த தாய், மகனும் நேற்று மைசூருவுக்கு வந்தனர். அவர்களுக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 2 ஆண்டுகள் 9 மாதங்களாக (அதாவது 33 மாதங்கள்) இந்த ஆன்மிக பயணத்தை அவர்கள் மேற்கொண்டு நிறைவு செய்துள்ளனர். சுமார் 56 ஆயிரம் கிலோ மீட்டர் அவர்கள் ஸ்கூட்டரிலேயே சுற்றியுள்ளனர். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தாய்க்கு ஆன்மிக தலங்களை சுற்றி காண்பித்து தாயின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் கிருஷ்ணகுமார் உள்ளார்.

அதே வேளையில் 70 வயதான ரத்னம்மா, தனது வயோதிகத்தை பொருட்படுத்தாமல் மகனுடன் 56 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து அனைத்து வழிபாட்டு தலங்களையும் பார்த்த பூரிப்பில் உள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணகுமார் கூறுகையில், இந்த ஆன்மிக யாத்திரையை பஸ் அல்லது வேறு ஏதேனும் வாகனத்தில் மேற்கொள்ள திட்டமிட்டோம். ஆனால் எனது தந்தை பயன்படுத்தி வந்த ஸ்கூட்டரில் இந்த பயணத்தை செய்தோம். இந்த ஸ்கூட்டரில் பயணம் செய்தது எனது தந்தை என்னுடன் இருப்பது போன்ற உணர்வு வெளிப்பட்டது. மேலும் தந்தையும் எங்களுடன் இந்த ஆன்மிக பயணத்தை மேற்கொண்டது போல் இருந்தது.

எனது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற இந்த பயணத்தை மேற்கொண்டேன். தற்போது எனது தாய் மகிழ்ச்சியுடன் உள்ளார். நாங்கள் பயணித்த போது 2 இடங்களில் ஸ்கூட்டர் டயர் பஞ்சர் ஆனது. ஆனால் வேறு எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்று கிருஷ்ணகுமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆனால் கிருஷ்ணகுமார், தனது பெற்றோர் மீதான அதீத அன்பாலும், தன்னை வளர்த்த பெற்றோரை இறுதிகாலம் வரை தானே பார்த்துக்கொள்ளவும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story