கன்னட திரை உலகினர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்; நடிகை அன்ட்ரிதா-கணவரிடம் 4 மணிநேரம் போலீஸ் விசாரணை - விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றது உண்மை என ஒப்புதல்


கன்னட திரை உலகினர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்; நடிகை அன்ட்ரிதா-கணவரிடம் 4 மணிநேரம் போலீஸ் விசாரணை - விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றது உண்மை என ஒப்புதல்
x
தினத்தந்தி 17 Sept 2020 4:17 AM IST (Updated: 17 Sept 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

கன்னட திரை உலகினர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகை அன்ட்ரிதா ராய், அவரது கணவரும் நடிகருமான திகந்திடம் போலீசார் 4 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றது உண்மை தான் என்றும், போதைப்பொருள் பயன்படுத்தவில்லை எனவும் 2 பேரும் கூறியுள்ளனர்.

பெங்களூரு,

கன்னட திரை உலகினர் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுதவிர நடிகைகளின் நண்பர்களான ரவிசங்கர், ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என 11 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

அத்துடன் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் அன்ட்ரிதா ராய், அவரது கணவரும், நடிகருமான திகந்த் ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, அன்ட்ரிதா ராய், அவரது கணவர் திகந்த் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பினார்கள். அதாவது அன்ட்ரிதா ராயின் வாட்ஸ்-அப்க்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், வருகிற 16-ந் தேதி (அதாவது நேற்று) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, கேரள சுற்றுப்பயணத்தில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் வழங்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு அன்ட்ரிதா ராய், அவரது கணவர் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, கேரள மாநிலம் வயநாட்டுக்கு சென்றிருந்த அன்ட்ரிதா ராய், திகந்த் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவே பெங்களூருவுக்கு புறப்பட்டனர். பின்னர் நேற்று காலை 11 மணியளவில் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் தம்பதியினர் ஆஜரானார்கள்.

அதைத்தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் இருந்து நடிகை அன்ட்ரிதா ராய், நடிகர் திகந்திடம் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். அன்ட்ரிதா ராயிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புனித்தும், நடிகர் திகந்திடம் உதவி போலீஸ் கமிஷனர் கவுதமும் விசாரணை மேற்கொண்டனர். தம்பதியிடம் முதலில் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அதாவது போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகைகளுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டீர்களா?, போதைப்பொருள் விவகாரத்தில் உங்களது பங்கு என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பரான ரவிசங்கருடன், நடிகை அன்ட்ரிதா ராய்க்கு பழக்கம் இருந்தது.

இதன் காரணமாக அவர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தினார்களா?, ரவிசங்கருடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து நடிகை அன்ட்ரிதா ராயிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதுபோல, நடிகர் திகந்திற்கு போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சேக் பாசிலுடன் தொடர்பு இருந்ததால், அது குறித்து போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர். தலைமறைவாக உள்ள சேக் பாசில், கைதாகி உள்ள ரவிசங்கருடன் நடிகர் திகந்த் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதன் காரணமாக அவர்களுடன் சேர்ந்து திகந்த் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

நடிகை அன்ட்ரிதா ராய், நடிகர் திகந்த் ஆகியோரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 மணிநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர். அதே நேரத்தில் 2 பேரின் செல்போன்களையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தார்கள். அவர்கள் யார்-யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள், போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் பேசினார்களா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையின் போது விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது உண்மை தான் என்று நடிகை அன்ட்ரிதா ராய், நடிகர் திகந்த் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் தாங்கள் 2 பேரும் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது இல்லை என்றும், போதைப்பொருட்கள் விற்பனையாளர்களுக்கும் தங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு சில தகவல்களை தெரிவிக்க அன்ட்ரிதா ராய், திகந்த் ஆகியோர் காலஅவகாசம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு போலீசாரும் சம்மதித்துள்ளனர். பின்னர் 4 மணிநேர விசாரணைக்கு பின்பு 2 பேரும், போலீஸ் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்று அன்ட்ரிதா ராய், திகந்திடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ராஜராஜேசுவரிநகரில் உள்ள தங்களது வீட்டுக்கு அன்ட்ரிதா ராய் தனது கணவருடன் மாலையில் வருகை தந்தார். அப்போது நடிகர் திகந்த் நிருபர்களிடம் கூறுகையில், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அதன்படி, நானும், அன்ட்ரிதா ராயும் ஆஜரானோம். போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினோம். மீண்டும் விசாரணைக்கு ஆஜராக கோரி சம்மன் அனுப்பினால், வர வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர். மீண்டும் சம்மன் அனுப்பினால் கண்டிப்பாக ஆஜராவோம். இந்த விவகாரத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கைதாகி இருப்பதால் நடிகை அன்ட்ரிதா ராயும் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவர்களிடம் விசாரணை நடத்திவிட்டு, விடுவிக்கப்பட்டு உள்ளதால் 2 பேரும் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story