முதலியார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் மோசடி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு


முதலியார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் மோசடி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Sept 2020 5:16 AM IST (Updated: 17 Sept 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

முதலியார்பேட்டையில் நிதிநிறுவனம் நடத்தி ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பணம் மோசடி செய்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை 100 அடி ரோடு கோட்டைசாமி நகரில் தனியார் நிதிநிறுவனம் உள்ளது. இங்கு பணம் முதலீடு செய்பவர்களுக்கு சில கவர்ச்சிகரமான சலுகைகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த திட்டங்களை மக்களிடம் விளம்பரப்படுத்த ஊழியர்கள் சிலரும் நியமிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த பலர் இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சாமுசிகாபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சேதுராமலிங்கம்(வயது 74) என்பவர் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அவர் தனது பணத்தை திருப்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த நிறுவனம் அவருக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்ததாக தெரிகிறது. அந்த நிறுவனம் அறிவித்த சலுகைகள் மற்றும் அசல் தொகையில் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 644 ரொக்கம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சேதுராமலிங்கம் அந்த நிறுவனத்தை பலமுறை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதற்கிடையே அந்த கம்பெனி மூடப்பட்டதாக சேதுராமலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் புதுவை வந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் மற்றும் போலீசார் தனியார் நிதிநிறுவன ஊழியர்களான கிருஷ்ணாநகர் ஹரிதாஸ்(57), அவரது மனைவி நந்தினி, கண்ணூர் ஜான் ஸ்டீபன்(52), மதுரை திருமங்கலம் ராஜ் குமார்(40) ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story