அரசு விழாவில் பாதியில் வெளியேறிய அன்பழகன் எம்.எல்.ஏ.


அரசு விழாவில் பாதியில் வெளியேறிய அன்பழகன் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 17 Sept 2020 5:21 AM IST (Updated: 17 Sept 2020 5:21 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நடந்த அரசு விழாவின்போது பாதியிலேயே அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை கடற்கரை காந்தி திடலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மிதிவண்டி பகிர்வு நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட அன்பழகன் எம்.எல்.ஏ. புதுவை அரசு மீதும், அதிகாரிகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் பேசியது வருமாறு:-

நான் அரசின் திட்டங்களை எதிர்ப்பவன் அல்ல. அதில் உள்ள குறைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறேன். வெளிமாநிலத்தில் இருந்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் புதுவை மக்களுக்கு எதுவும் செய்யக்கூடாது என்று சத்தியம் செய்துகொண்டு வருகின்றனர்.

எனது தொகுதியில் 800 வீடுகளில் கழிப்பிடம் இல்லை. 900 குடிசை வீடுகள் உள்ளன. அவற்றை கல்வீடாகவோ, அடுக்குமாடி கட்டிடமாகவோ மாற்ற அரசிடம் திட்டம் ஏதும் இல்லை. எனது தொகுதி நேதாஜி நகர் வார்டுக்கு எந்த திட்டமும் இல்லை. ஆனால் அதை தாண்டி அரியாங்குப்பம் தொகுதிக்கு திட்டம் உள்ளது. இது ஸ்மார்ட் சிட்டியா? அல்லது காங்கிரஸ் சிட்டியா?

எனது தொகுதியில் 28 குளங்கள் உண்டு. ஆனால் இப்போது அதில் 23 குளங்களை காணவில்லை. அதை கலெக்டர் கண்டுபிடித்து கொடுப்பாரா? 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரிய வாய்க்கால் இடிந்துபோய் உள்ளது. அதை சரிசெய்ய திட்டம் இல்லை.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வான என்னை பழிவாங்குவதாக நினைத்து தொகுதி மக்களுக்கு நியாயமாக செய்யவேண்டிய பணிகளை செய்யாமல் அரசு பழிவாங்குகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

தொடர்ந்து அவர் மேடையை விட்டு இறங்கி பாதியிலேயே சென்றுவிட்டார். இதன் காரணமாக விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story