ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் டிசம்பர் மாதத்துக்குள் 22 பணிகளை நிறைவேற்ற வேண்டும் - நாராயணசாமி வேண்டுகோள்


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் டிசம்பர் மாதத்துக்குள் 22 பணிகளை நிறைவேற்ற வேண்டும் - நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Sep 2020 11:58 PM GMT (Updated: 16 Sep 2020 11:58 PM GMT)

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் டிசம்பர் மாதத்துக்குள் 22 பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.5 கோடியே 50 லட்சம் செலவில் 41 இடங்களில் மிதிவண்டி (சைக்கிள்) பகிர்வு நிலையம், 10 நவீன கழிப்பறைகள் அமைத்தல், பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்துதல், 5 நடமாடும் கழிப்பறைகளை உருவாக்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கடற்கரை காந்தி திடலில் நேற்று நடந்தது.

விழாவுக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கலெக்டர் அருண் வரவேற்றுப் பேசினார். விழாவில் அடிக்கல்லை திறந்து வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு சார்பில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் ஆலோசனைகளின்பேரில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் இந்த அரசை குறைகூறுவது வாடிக்கையாக உள்ளது. அவர் ஊரடங்கு காலத்தில் அரசு விழாக்கள் நடத்தக் கூடாது என்கிறார். தமிழகத்தில் முதல்-அமைச்சர் மாவட்டந்தோறும் சென்று விழா நடத்தி வருகிறார். கர்நாடகாவில் விழாக்கள் நடக்கிறது.

கடலூர், விழுப்புரத்தில் அரசு விழாக்கள் நடத்தலாம். ஆனால் புதுச்சேரியில் நடத்தினால் அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கு வயிறு எரிகிறது. அவர் விளம்பரத்துக்காக எதையும் பேசுவது அழகல்ல. இந்த திட்டங்கள் எல்லாம் காலதாமதமாக நடக்கிறது என்பது உண்மை. ஆனால் எதுவும் கிடப்பில் போடப் படவில்லை. திட்டங்களை நிறைவேற்றும்போது அதை பாராட்ட வேண்டும்.

விரைவில் இன்னும் ரூ.200 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. அப்போது எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும். ஆட்டுப்பட்டி, திப்புராயப்பேட்டை போன்ற பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டங்களும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் உள்ளது. அப்படியிருக்க அவர் வெளிநடப்பு செய்வது நியாயமல்ல.

திட்டங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் காலம் கடத்தியதுதான் தாமதத்துக்கு காரணம். இப்போது அந்தந்த துறைகளே வேலைகளை செய்ய கூறியுள்ளோம். புதுவைக்கு சுற்றுலா பயணிகளும் வர ஆரம்பித்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்த திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் 22 திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, அன்பழகன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், ஸ்மார்ட் சிட்டி அதிகாரி மாணிக்க தீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story