குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பில் ஆங்கில மொழிக் கல்வி முறையில் 2 பாடப்பிரிவுகள் தொடக்கம்


குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பில் ஆங்கில மொழிக் கல்வி முறையில் 2 பாடப்பிரிவுகள் தொடக்கம்
x
தினத்தந்தி 17 Sept 2020 6:01 AM IST (Updated: 17 Sept 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பில் ஆங்கில மொழிக் கல்வி முறையில் 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

குளித்தலை,

குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 11-ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி முறையில் இரண்டு பாடப்பிரிவுகளில் நடப்பு கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்மொழியில் மட்டுமல்லாது ஆங்கிலமொழி வழியிலும் வகுப்புகள் தொடங்கலாம் என அறிவித்திருந்தது. அதன்படி குளித்தலை நகரப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கல்வி முறையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இப்பள்ளியில் சேரவரும் மாணவ, மாணவிகள் தாங்கள் விரும்பும் மொழியை தேர்வு செய்து படித்தும் வந்தனர். இந்தநிலையில் இப்பள்ளிகளில் 10 வகுப்பு வரை மட்டுமே ஆங்கில மொழி கல்வி வகுப்புகள் இருந்தன. இதனால் 10-ம் வகுப்பு வரை ஆங்கில மொழி கல்வி முறையில் படித்துவிட்டு, 11-ம் வகுப்பில் தமிழ் மொழி கல்வியில் படிக்கவேண்டிய அவலநிலை மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டுவந்தது.

ஆங்கிலமொழி கல்வி வகுப்பு

இதனால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் அதிக செலவு செய்து தனியார் பள்ளிகளில் சேரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர். பலர் வேறுவழியின்றி தமிழ் மொழி வழியாகவே படித்து வருகின்றனர்.ஏழை, எளிய மாணவ, மாணவிகள் ஆங்கிலமொழி கல்வி முறையை தொடங்கமுடியாத அவலநிலை தொடர்ந்துவருகிறது. குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு முதல் 11-ம் வகுப்பில் ஒரே ஒரு பாடப்பிரிவுக்கு மட்டும் ஆங்கிலமொழி கல்வி வகுப்பு தொடங்கப்பட்டது. ஆனால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எந்த பாடப்பிரிவுக்கும் ஆங்கில மொழி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. குளித்தலை பகுதியில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆங்கில மொழி கல்வி முறையை உடனடியாக கொண்டுவரவேண்டுமென சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

எதிர்பார்ப்பு

இந்தநிலையில் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டு முதல் அறிவியல் மற்றும் வரலாறு (வரலாறு, வணிகவியல், கணக்குபதிவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்கள் அடங்கியது) ஆகிய 2 பாடப்பிரிவுகளுக்கு ஆங்கில மொழி கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்தாக ஒன்றாக இருந்தபோதிலும், இனிவரும் கல்வி ஆண்டுகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் உரிய ஆசிரியர்கள், போதுமான வகுப்பறை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி கல்வி முறையை அரசு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Next Story