அண்ணாசாலையில் உள்ள அரசினர் தோட்டம் சுரங்கப்பாதை புதுபொலிவுடன் திறப்பு முறையாக பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை


அண்ணாசாலையில் உள்ள அரசினர் தோட்டம் சுரங்கப்பாதை புதுபொலிவுடன் திறப்பு முறையாக பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Sept 2020 7:34 AM IST (Updated: 17 Sept 2020 7:34 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாசாலையில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் சுரங்க ரெயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டு புதுபொலிவுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை அண்ணாசாலையில் அரசினர் தோட்டம் சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பழைய அண்ணா சுரங்கப்பாதை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு உள்ளது. சென்னையின் மிகப்பெரிய சுரங்கப்பாதையில் ஒன்றான பழைய அண்ணா சுரங்கப்பாதை அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு கீழே அமைந்து உள்ளது.

இப்போது உள்ள மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு கட்டமைப்புகளில் இருப்பது போன்று அழகிய கிரானைட் தளம், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட சுவர்கள், புதிய விளக்குகளுடன் சுரங்கப்பாதை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலைய பொதுத்தளத்திற்கு சுரங்கப்பாதை நேரடியாக இணைக்கப்பட்டு உள்ளது. வாலாஜா சாலை, எல்லீஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் அண்ணாசாலை ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் பயணிப்பதுடன் சாலையை எளிதில் கடக்கலாம்.

அறிவிப்பு பலகைகள்

காதிபவன் மற்றும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றையும் இந்த அண்ணா சுரங்கப்பாதை இணைக்கிறது.

மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு பயணிகளை வழிநடத்த அண்ணா சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் மற்றும் நடைப்பாதைகளிலும் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.

மேற்கண்ட தகவலை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

‘பயணிகள் வசதிக்காக சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட சுரங்கப்பாதையை சம்பந்தப்பட்ட துறையினர் நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் சுவரொட்டிகள் ஓட்டுபவர்களிடம் காத்து முறையாக பராமரிக்க வேண்டும்’ என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story