வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ஆவணங்கள் பறிமுதல்; வங்கி லாக்கருக்கு ‘சீல்’


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ஆவணங்கள் பறிமுதல்; வங்கி லாக்கருக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 17 Sept 2020 2:45 PM IST (Updated: 17 Sept 2020 2:11 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 8 மணி நேரம் திடீர் சோதனை நடத்தினர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பி.டி.ஆர். பண்ணை வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 40). இவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, குச்சனூர், அனுமந்தன்பட்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளில் பணியாற்றினார்.

இந்தநிலையில் பாலசுப்பிரமணியன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் கள் வந்தன. இதையடுத்து கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை பற்றி ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பாலசுப்பிரமணியன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் நேற்று காலை 7 மணி அளவில் உத்தமபாளையத்தில் உள்ள பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு வந்தனர். அப்போது போலீசார், அவரது வீட்டுக்குள் சென்றதும் கதவுகளை உள்புறமாக பூட்டிக்கொண்டனர்.

பின்னர் வீட்டில் இருந்த பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவியிடம் இருந்த செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்தனர். தொடர்ந்து உத்தமபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் முன்னிலையில் அவரது வீட்டில் இருந்த ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் மற்றும் நகைகள் குறித்து பாலசுப்பிரமணியனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் உத்தமபாளையத்தில் அவர் கணக்கு வைத்துள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு அழைத்து சென்றனர். அங்கு உள்ள அவரது லாக்கரில் போலீசார் சோதனை நடத்தினர். அதன்பிறகு அந்த லாக்கரை பூட்டி போலீசார் ‘சீல்’ வைத்தனர். பாலசுப்பிரமணியன் வீட்டில் காலை 7 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த சோதனை மாலை 3 மணி வரை நடந்தது. அதாவது 8 மணி நேரம் போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது, பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. இதுகுறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் அவரது வீடு மற்றும் வங்கி லாக் கரை திறந்து சோதனை நடத்தப்பட்டது. மேலும் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை உத்தமபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story