வாணாபுரம் அருகே, முதியவரை சரமாரி தாக்கி கொன்ற கொள்ளையர்கள் - மனைவியிடம் மூக்குத்தியை பறித்து தப்பினர்


வாணாபுரம் அருகே, முதியவரை சரமாரி தாக்கி கொன்ற கொள்ளையர்கள் - மனைவியிடம் மூக்குத்தியை பறித்து தப்பினர்
x
தினத்தந்தி 17 Sept 2020 3:30 PM IST (Updated: 17 Sept 2020 3:15 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே முதியவரை கொன்ற கொள்ளையர்கள் அவரது மனைவியிடம் மூக்குத்தியை பறித்துச்சென்றுள்ளனர்.

வாணாபுரம், 

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள குங்கிலியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (வயது 75). இவரது மனைவி அலமேலு (70). இவர்கள் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் தனியாக கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். மகன் பாலகிருஷ்ணள் (55) மனைவியுடன் தனியாக வசிக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் ஏரிக்கரையில் உள்ள குடிசை வீட்டில் வசிக்கும் ராஜுவின் லீட்டிற்குள் வீட்டுக்குள் புகுந்தனர்.

அவர்கள் ராஜு மற்றும் அவரது மனைவி அலமேலுவிடம் நகை, பணத்தை எங்கே வைத்திருக்கிறீர்கள். அதனை எடுங்கள் என கூறி இருவரையும் பயங்கரமாக தாக்க தொடங்கினர். இதில் 2 பேரும் நிலைகுலைந்து போயினர். அப்போது கொள்ளையர்கள் அலமேலு அணிந்திருந்த ஒரு கிராமம் மூக்குத்தியை கழற்றினர். வலி தாங்க முடியாமல் அலமேலு அலறினார். மூக்குத்தியை கழற்றிய கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரத்தையும் எடுத்துக்கொண்டு தப்பினர். இவர்களது வீடு ஊருக்கு வெளியே இருப்பதால் கொள்ளையர்கள் தாக்கியபோது ராஜி மற்றும் அலமேலு ஆகியோரின் அலறல் சத்தம் அருகில் உள்ளவர்களுக்கு கேட்கவில்லை.

இதில் கொள்ளையர் தாக்கியதில் ராஜு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். லேசான காயத்துடன் அலமேலு வெகுநேரம் போராடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஏரிப் பகுதிக்கு சென்றவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜுவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அலமேலு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த வாணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோரும் வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர்.

கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்க போலீஸ் மோப்பநாய் மியா வரவழைக்கப்பட்டு ராஜு கொலை செய்யப்பட்ட இடத்தில் மோப்பம் பிடிக்க விடப்பட்டது. அங்கிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த நிலையில் விசாரணை நடத்திய போலீசார் வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்களை பிடித்துச் சென்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேரத்தில் வயதான தம்பதியினரை தாக்கி பணம் பறித்தது மட்டுமல்லாமல் முதியவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story