அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இந்தி வாசகத்தை அழித்த வாலிபர்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இந்தி வாசகத்தை அழித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை,
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தற்போது ரெயில்கள் இயங்காததால் வெறிச்சோடி காணப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு இடையே ஒர்க்மேன் ஸ்பெஷல் என்ற சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. எனவே, ரெயில் நிலையத்தில் யாரும் அனுமதியின்றி உள்ளே நுழைய கூடாது என்பதால் ரெயில்வே பாதுகாப்பு படையினர்இ ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ஒரு வாலிபர் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் அமைந்துள்ள அரக்கோணம் சந்திப்பு என்ற பெயர் பலகையில் இந்தி எழுத்தை கருப்பு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் அரக்கோணம் காந்திநகரை சேர்ந்த குமரன் (வயது 38) என்பதும், அரக்கோணத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறினார். மேலும் அண்ணா பிறந்த நாளன்று அண்ணாவின் சொற்பொழிவு கேட்டபோது, தமிழ் மீது அதிகப் பற்று ஏற்பட்டு, தமிழகத்தில் இந்தி அனுமதிக்க கூடாது என்ற எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று ரெயில் நிலையத்திற்கு இந்தி எழுத்தை கருப்பு பெயிண்ட் அடித்ததாகவும் கூறினார்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story