மணல் திருட்டில் தொடர்புடையவர் மீது நடவடிக்கை எடுக்காத பெண் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


மணல் திருட்டில் தொடர்புடையவர் மீது நடவடிக்கை எடுக்காத  பெண் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 17 Sept 2020 4:45 PM IST (Updated: 17 Sept 2020 4:41 PM IST)
t-max-icont-min-icon

மணல் திருட்டில் தொடர்புடையவர் மீது நடவடிக்கை எடுக்காத பெண் இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து டி.ஐ.ஜி. நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் மற்றும் சவடு மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருக்கோஷ்டியூர் அருகே கோட்டையிருப்பு கிராமத்தை சேர்ந்த சண்முகவடிவேல் என்பவர் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் அனுமதி இன்றி 50 லோடு மணல் மற்றும் 150 லோடு சவடுமண் எடுத்துச் சென்று அவருக்கு சொந்தமான தோப்பில் சேகரித்து வைத்துள்ளதாகவும் அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்தன.

இதை தொடர்ந்து, திருப்பத்தூர் தாசில்தார் ஜெயலட்சுமி திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 6-ந் தேதி புகார் கொடுத்தார். அத்துடன் திருட்டு மண் சேமித்து வைக்கப்பட்டிருந்த சண்முக வடிவேலின் தோட்டத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில் திருக்கோஷ்டியூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமணி, மணல் திருட்டில் தொடர்புடைய சண்முகவடிவேல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், டி.ஐ.ஜி. மயில்வாகனனுக்கு தாசில்தார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயமணியை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து டி.ஐ.ஜி. மயில்வாகனன் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் கூறும் போது, “சிவகங்கை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு துணை போகும் போலீசார் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

Next Story