மழைக்காலம் தொடங்கி விட்டதால் சிவகாசியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம் - நகராட்சி கமிஷனர் தகவல்
மழைக்காலம் தொடங்கி விட்டதால் சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். சிவகாசி நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி நிருபரிடம் கூறியதாவது:-
சிவகாசி,
சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகர பகுதியில் தினமும் பொதுமக்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முடிவுக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணி இதுவரை 45 நாட்கள் நடந்துள்ளது. இந்த சோதனையில் பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் சென்ற 933 பேருக்கு தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து பகுதிகளையும் சுகாதார பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். காலை 6 மணி முதல் 11 மணிவரை 5 மணி நேரம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் டெங்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. இதற்காக நகராட்சி சார்பில் தினமும் மாலை நேரங்களில் 4 மணி நேரம் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இதற்காக கொசு ஒழிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியில் 50 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்காக தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் டெங்கு நோயை ஏற்படுத்தும் கொசுகள் இருக்க கூடாது என்பதில் நகராட்சி நிர்வாகம் கவனமாக இருக்கிறது. கொசுபுழுக்களை ஒழிக்க தண்ணீரில் கிருமிநாசினி ஊற்றப்படுகிறது. டெங்கு ஒழிப்பு பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது சிவகாசி பகுதியில் டெங்கு பாதிப்பு இல்லை.
சிவகாசி பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கடைகளில் சின்ன, சின்ன பணிகள் செய்து முடிக்காமல் இருக்கிறது. இந்த பணிகளை விரைவில் செய்து முடித்து விட்டு அந்த கடைகளை வாடகைக்கு விட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பணி இன்னும் ஒரு மாதத்தில் முடியும். பொதுமக்கள் நகர் பகுதிக்கு வரும் போதும், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு செல்லும் போதும் உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அரசு உத்தரவுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story