விழுப்புரத்தில், ஊட்டச்சத்து விளக்க கண்காட்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


விழுப்புரத்தில், ஊட்டச்சத்து விளக்க கண்காட்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Sept 2020 8:45 PM IST (Updated: 17 Sept 2020 8:38 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஊட்டச்சத்து குறித்த விளக்க கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து சம்பந்தமான விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்து அதில் இடம்பெற்றிருந்த மாதிரி அங்கன்வாடி மையம், புரத சத்து நிறைந்த உணவு, இரும்புச்சத்து நிறைந்த உணவு, விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ நிறைந்த உணவு, மூலிகைகள், நாட்டு காய்கறி விதைகள், சிறு தானியங்கள் மூலம் செய்யப்படும் தின்பண்டங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் கண்காட்சியின் ஒரு பகுதியாக ரத்த சோகை உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த பெட்டகம், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு புரதம் மற்றும் சக்தி வாய்ந்த உணவுகள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார்.

அப்போது கொரோனா காலத்தில் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றியதற்கு கலெக்டர் அண்ணாதுரை, பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டதோடு மேலும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் மாதத்தில் கர்ப்பிணிகள், வளர் இளம்பெண்கள் ஆகியோர் ரத்த சோகை இல்லாமலும், எடை குறைந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல் குறித்தும், அதிக உத்வேகத்துடனும், நோக்கத்தை அடைய உரிய வழிமுறைகளை வகுத்தும் பணியாற்றும்படி அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவில் சிறிய அளவில் கீரை வகைகளை வளர்க்க அதற்கான விதைகளை தூவி வீட்டு தோட்டம் அமைப்பதை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, மகளிர் திட்டம், உணவு பாதுகாப்புத்துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story