தொண்டாமுத்தூர் அருகே, தண்ணீர் வாளிக்குள் மூழ்கி 9 மாத குழந்தை பலி
தொண்டாமுத்தூர் அருகே தண்ணீர் வாளிக்குள் மூழ்கி 9 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பேரூர்,
அசாம் மாநிலம் ரூபாலி மாவட்டத்தை சேர்ந்தவர் அபுல் உசேன் (வயது 25). இவருடைய மனைவி தசீனா. இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர் தனது மனைவியுடன் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள யுவராஜ் கார்டனில் வசித்து வருகிறார்.
அத்துடன் கணவன்-மனைவி இருவரும் அங்குள்ள பாக்கு தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு மேரியோம் (3) மற்றும் தகோளம் என்ற 9 மாத ஆண் குழந்தை இருந்தது. அபுல் உசேன் சம்பளத்தை தசீனாவிடம் கொடுப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு நள்ளிரவு வரை நீடித்தது. பின்னர் அதிகாலை 2 மணிக்கு அவர்கள் படுத்து உறங்கினார்கள். காலையில் எழும்பிய அபுல் உசேன் வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் தசீனா மட்டும் எழும்பவில்லை.
இதனால் அவர் அருகே படுத்திருந்த 9 மாத ஆண் குழந்தை எழும்பி, வீட்டிற்குள் அங்கும் இங்கும் சென்றது. வீட்டின் கதவு திறந்து கிடந்ததுடன், படிக்கட்டு அருகே ஒரு வாளியும் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் படிக்கட்டில் இருந்து இறங்கிய குழந்தை தவறி அங்கிருந்த வாளி தண்ணீருக்குள் விழுந்தது.
இந்த நிலையில் தூங்கி எழும்பிய தசீனா, தனது குழந்தை அருகில் இல்லாதது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் அவர் வீடு முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. அவர் படிக்கட்டு அருகில் உள்ள வாளிக்குள் பார்த்தபோது, அதற்குள் இருந்த தண்ணீருக்குள் குழந் தை கிடந்தது.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், குழந்தையை மீட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் கணவன்-மனைவி அந்த 9 மாத குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story