சேறும்,சகதியுமாக மாறிய குதிரை பந்தய மைதானம் - கற்கள் பதிக்க டிரைவர்கள் கோரிக்கை
சேறும், சகதியுமாக மாறிய குதிரை பந்தய மைதானத்தில் இன்டர்லாக் கற்கள் பதிக்க வேண்டும் என்று டிரைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. சீசன் காலங்களில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகை தருவதால் ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு ரோஜா பூங்கா அருகே மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட வில்லை. தொடர்ந்து ஊட்டி குதிரை பந்தய மைதானத்தின் ஒரு பகுதியில் 4 ஏக்கர் நிலம் வாகனம் நிறுத்தும் இடமாக ஒதுக்கப்பட்டது. தற்போது நகராட்சி கட்டுப்பாட்டில் அந்த இடம் உள்ளது.
ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த வாகனங்களில் ஊட்டிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். அவர்கள் ஏ.டி.சி.யில் உள்ள குதிரை பந்தய மைதான வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கிறார்கள். அங்கு வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட வில்லை. ஆரம்பத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் புதர்கள் அகற்றப்பட்டு சமன்படுத்தப்பட்டது. பின்னர் தரை தளம் அமைக்காமல் அப்படியே விடப்பட்டது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் வாகன நிறுத்தும் இடத்தில் தண்ணீர் தேங்கியது. வாகனங்கள் வந்து செல்வதால் சேறும், சகதியுமாக மாறி உள்ளது.
இதனால் அங்கு வாகனங்களை நிறுத்தினால் சேற்றில் சிக்கி விடுமோ என்ற அச்சத்தில் பலர் கமர்சியல் சாலை, லோயர் பஜார், மணிக்கூண்டு, ஏ.டி.சி. உள்ளிட்ட சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே அங்கு நிறுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோயர் பஜாரில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கயிறு கட்டப்பட்டது. அதற்கு பதிலாக குதிரை பந்தய மைதான வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மீண்டும் சாலை ஓரத்திலேயே அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ஊட்டி குதிரை பந்தய மைதான வாகன நிறுத்தும் இடத்தில் 4 சக்கர வாகனங்கள் உள்பட சரக்கு வாகனங்களை நிறுத்த இடவசதி உள்ளது. இருப்பினும், தளம் சீரமைக்காமல் அப்படியே விடப்பட்டு இருக்கிறது. மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் உள்ளது. எனவே, தரையில் இன்டர்லாக் கற்கள் பதித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலித்தால் வாகனங்கள் முறையாக நிறுத்தப்படும். மேலும் வாகன நிறுத்தும் இடத்தை மது பிரியர்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மதுபானங் களை வாங்கி வந்து மது அரு ந்தி விட்டு காலி பாட்டில்களை தூக்கி வீசி செல்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story