மில்களை திறக்கக்கோரி என்.டி.சி. மண்டல அலுவலகம் முற்றுகை
மில்களை திறக்கக்கோரி என்.டி.சி. மண்டல அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
கோவை,
என்.டி.சி. மில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும், என்.டி.சி. (தேசிய பஞ்சாலை) மில்களை திறந்து இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.டி.சி. தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் என்.டிசி. நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி. மண்டல அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் சீனிவாசன், பாலசுந்தரம் (ஐ.என்.டி.யு.சி), ராஜாமணி, கோவிந்தராஜூலு (எச்.எம்.எஸ்.), ஆறுமுகம் (ஏ.ஐ.டி.யு.சி.), நாகேந்திரன், ஆறுமுகம் (எல்.பி.எப்.), கோபால், தேவராஜன் (ஏ.டி.பி.), தியாகராஜன், கோவிந்தசாமி (எம்.எல்.எப்.), கிருஷ்ணமூர்த்தி (சி.ஐ.டி.யு.), உதயகுமார், நீலமேகம் (டாக்டர் அம்பேத்கர் யூனியன்), ரங்கசாமி (என்.டி.எல்.எப்.) மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
என்.டி.சி. மில் நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் காலம் கடத்தி வருகிறது. இதனால் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திராவில் உள்ள என்.டி.சி. மில் தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மில்களை இயக்காமலும், முழு சம்பளம் வழங்காமலும் என்.டி.சி. நிர்வாகம் தொழிலாளர்களை அலைக்கழித்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மில்களை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். சிறிது நேரம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story