பெங்களூருவில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது - ரூ.50 லட்சம் கஞ்சா, கார் பறிமுதல்


பெங்களூருவில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது - ரூ.50 லட்சம் கஞ்சா, கார் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Sep 2020 9:30 PM GMT (Updated: 17 Sep 2020 9:14 PM GMT)

பெங்களூருவில் கல்லூரிமாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டபனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் போலீசார் சோதனை நடத்திய போது கஞ்சா மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் காடுகோடி அருகே பெலத்தூர் காலனியை சேர்ந்த அஜாம் பாஷா என்ற அஸ்லாம் பாஷா (வயது 25), மஸ்தான் வாலி (25), பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையை சேர்ந்த முகமது அப்பாஸ் (27) என்று தெரிந்தது.

இவர்கள் 3 பேரும் மினிலாரி மூலமாக ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்திற்கு சென்று, அங்கு கஞ்சா விற்கும் கும்பலிடம் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்துள்ளனர். அவற்றை அடுக்குமாடி குடியிருப்பில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. குறிப்பாக பெங்களூரு, பெங்களூரு புறநகர் மாவட்டம், ராமநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு விற்று வந்துள்ளனர். இதுதவிர பெங்களூருவில் கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு 3 பேரும் கஞ்சா விற்று பணம் சம்பாதித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கைதான 3 பேரிடம் இருந்து 90 கிலோ கஞ்சா, ஒரு கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். கைதான 3 பேர் மீதும் காடுகோடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உத்தரவின் பேரில் போலீசார் இந்த சோதனை நடத்தி 3 பேரையும் கைது செய்திருந்தனர்.

Next Story